விடைபெற்றார் பேரழிவிலிருந்து ஜப்பானை மீட்ட நாயகன்...

விடைபெற்றார் பேரழிவிலிருந்து ஜப்பானை மீட்ட நாயகன்...

மார்பில் சுடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்...

உயிருக்கு போராடிய ஷின்சோ:

ஜப்பானின் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாராவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், ஷின்சோ அபே தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற அவரை மீட்பதற்காக மருத்துவக்குழுக்கள் தீவிரமாக போராடின. தொடர் சிகிச்சையும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ உதவிகள் பலன் அளிக்காமல் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

ஷின்சோவை சுட்டது யார்? காரணம் என்ன? 

ஷின்சோ அபேவை சுட்டது யார் என்பது தெளிவாகத் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த மர்ம நபர்  ஜப்பானின் கப்பற்படையின் முன்னாள் வீரர் எனத் தெரியவந்துள்ளது.  சுடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஷின்சோ அபே கைத்துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும்  கழுத்தின் வலது பக்கத்தில் காயங்கள் இருப்பதாக டோக்கியோவில் உள்ள உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறினர்.

யார் இந்த ஷின்சோ அபே?

ஷின்சோ அபே 2006-07 மற்றும் 2012-20 ஆகிய இரண்டு முறை ஜப்பானின் பிரதமராக இருந்துள்ளார். முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக பார்க்கப்படும் ஷின்சோ அபேவின் தாத்தா கிஷி நோபுசுகே 1957 முதல் 1960 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றியவர். மேலும் அவரது மாமா சாடோ ஐசாகு 1964 முதல் 1972 வரை அதே பதவியில் இருந்தவர்.

அவர் டோக்கியோவில் உள்ள சேய்க்கி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் (1977).  பின்னர் அவர் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார்.

1980 களின் முற்பகுதியில், அபே லிபரல்-டெமாக்ரடிக் கட்சியில்  தீவிரமாக செயல்பட்டார். மேலும் 1982 இல் அவர் ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக இருந்த தனது தந்தை அபே ஷிண்டாரோவின் செயலாளராக பணியாற்றினார்.

அபே இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறந்த ஜப்பானின் முதல் பிரதம மந்திரி மற்றும் ஜப்பானின் இளைய பிரதமர்.

ஷின்சோ அபே ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர். இந்த தசாப்தத்தின் சிறந்த பகுதியாக ஜப்பானை வடிவமைத்தவர். இதனால், நவீன் ஜப்பானின் தந்தையாக ஷின்சோ அபே கருதப்படுகிறார். 

ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபே இருந்த எட்டு ஆண்டுகளில், அபே அதிக சாதனைகள் செய்துள்ளார். குறிப்பாக, நிலநடுக்கம், சுனாமி மற்றும் அணுஉலை வெடிப்பு போன்ற  பேரழிவுகளில் இருந்து ஜப்பான் மீண்டு வர சிறப்பாக செயல்பட்டவர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல சிறப்பான கொள்கைகளை அறிமுகப்படுத்தியவர். இந்த நடவடிக்கைகள் அவருக்கு "அபெனோமிக்ஸ்" என்ற புனைப்பெயரை பெற்றுதந்தது.

ஷின்சோ அபே அரசு  ஜப்பான் பாதுகாப்பு செலவினங்களுக்கு முன்னுரிமை அளித்தது.  2017 ஆம் ஆண்டில், பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்தும் விதியை அவர் ரத்து செய்ததின் மூலம் ஜப்பானின் பாதுகாப்பு செலவு 13 சதவீதமாக  உயர்ந்தது.

பிரதமர் பதவி ராஜினாமா செய்ய காரணம்:

பெருங்குடல் அழற்சி நோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்ட  அவரது உடல்நிலை மிகவும்  மோசமடைந்ததால் தனது பதவிக் காலம் முடியும் முன்னரே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.   தனது பதவிக் காலத்தை முடிக்கத் தவறியதற்காக ஜப்பானிய மக்களிடம் அப்போது மன்னிப்பும் கோரியிருந்தார் அபே.