ஈஸ்வரன் தான் கொங்கு நாட்டு முதல்வராம்..! அப்போ அண்ணாமலைக்கு அல்வாவா?

சுவர் விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை..!

ஈஸ்வரன் தான் கொங்கு நாட்டு முதல்வராம்..! அப்போ அண்ணாமலைக்கு அல்வாவா?

கோவையில் ”கொங்கு நாட்டு முதல்வரே” என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கு பட்டம் சூட்டி சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தில் 10 லோக்சபா தொகுதிகள் மற்றும் 61 சட்டசபை தொகுதிகள் அடங்குகின்றன. அருகாமையில் உள்ள சில தொகுதிகளை சேர்த்து 90 சட்டசபை தொகுதிகளுடன் ’கொங்கு நாடு’ ஒன்றை பிரித்து அதனை யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவியது. 

காரணம், மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முன்னாள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் குறிப்புகளில் கொங்குநாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவராக அண்ணாமலை ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினர், அவரை தான் அடுத்த ’’கொங்கு நாடு முதல்வர்’’ என பட்டம் சூட்டி வரவேற்பு அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாஜகவினருக்கு டஃப் கொடுக்கும் வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு ’’கொங்கு நாடு முதல்வரே’’ என பட்டம் சூட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையை போற்றும் வகையில், சங்ககிரி ஓடா நிலையில் நடக்கவுள்ள நினைவஞ்சலிக்காக கோவை முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கோவை மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் அருகே போடிபாளையம் கிளை சார்பில், நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும், ஈஸ்வரனை வரவேற்க ’’கொங்கு நாட்டு முதல்வரே’’ என அவருக்கு பட்டம் சூட்டி இந்த சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கொங்கு நாடு பிரச்னைக்கு திமுகவினரும், முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கொங்கு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் இதுபோன்று விளம்பரங்கள் செய்வது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ’’கோவை புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி’’-யிடம் கேட்ட போது, கொ.ம.தே.க-வினரின் இத்தகைய செயல் குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிப்போம் எனவும், தலைமை இது குறித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியிருக்கிறார். 

சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் மதுக்கரை பகுதியின் ’’கொ.ம.தே.க செயலாளர் பாலு’’, 13 ஆண்டுகளாக பல்வேறு அடைமொழி கொடுத்து, சுவர் விளம்பரம் எழுதுவதாகவும், பிளக்ஸ் பேனர் வைத்து, போஸ்டர் வைப்பதாகவும் கூறுகிறார். மேலும், அந்தந்த பகுதி நிர்வாகிகள் விருப்பத்துக்கேற்ப எழுதுவார்கள் எனவும், கொங்கு நாடு பற்றிய பிரச்னையில் கட்சி பொதுசெயளார் கருத்தே, எங்கள் கருத்து என்கிறார். 

கொங்கு மண்டலங்களில் பலமாக இருக்கும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினர் ஏற்கனவே, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலையை கொங்கு நாடு முதல்வர் என புகழ்ந்து வரும் நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருப்பவர்களே இதுபோன்று விளம்பரம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.