இனமென பிரிந்தது போதும்: வடமாநில பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தமிழ்நாட்டு மருத்துவர்கள்!

இனமென பிரிந்தது போதும்: வடமாநில பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தமிழ்நாட்டு மருத்துவர்கள்!

மதுரை அரசு மருத்துவமனையில் வளர்ந்த வடமாநில பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தோப்பூர் மருத்துவனை டீன் - காண்போரை நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்வு.

மதுரை அருகே தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை உள்ளது. அங்கு பணிபுரியும் மருத்துவர்களும், பணியாளர்களும் 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு வந்த இடத்தில் தாய் மரணிக்க, ஆதரவற்று தவித்த வடமாநில பெண் குழந்தையையும், அவரது தம்பியையும் அரசு மருத்துவமனையில் உள்ள உறைவிட மருத்துவ அலுவலர் காந்திமதிநாதன் அக்குழந்தைகளை அரவணைத்து தங்களுடைய பிள்ளைகளைபோல் படிக்க வைத்து வளர்ந்து ஆளாக்கினார். இப்போது அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார்.

நேற்று திருமணமான அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இடத்தில் இருந்து சீர்வரிசை செய்ய ஏற்பாடு செய்துள்ள இந்தச் சம்பவம் காண்போரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த குழந்தையின் பெயர்தான் ரீட்டா. ரீட்டாவின் தாய் ரொஸ்பெக், மதுரையைச் சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவரது கணவனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் அங்கிருந்து டெல்லி சென்று அங்குள்ள உள்ள ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து சந்தோஷமாக புது வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். 

அவர்களது குடும்ப வாழ்க்கைக்கு ஆதாரமாக ரீட்டா, அலெக்ஸ் என இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். காலப்போக்கில் கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு கணவன் மற்றொரு பெண்ணுடன் பழகி அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் பிறக்கவே, அவர்களை பாராமரிக்கும்படி ரொஸ்பெக்கையும், அவரது இரு குழந்தைகளையும் கொடுமை செய்துள்ளார். தட்டிகேட்க வேண்டிய கணவர், கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன் தவறை உணரும்போது உடல்நலக் குறைவால் இறந்து விட அதற்கு மேல் அந்த வீட்டில் ரொஸ்பெக்கால் வசிக்க முடியவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளார். மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய இடத்தில் ரொஸ்பெக்கிற்கு உடல்குறைவு ஏற்பட அவர், ரயில் நிலையம் வளாகத்திலே படுத்த படுக்கையானார். 

அவரது குழந்தைகள் ரீட்டா, அலெக்ஸ் இருவரும் டெல்லியிலே பிறந்து வளர்ந்ததாலே அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அவர்கள் பேசும் மொழி, மற்றவர்களுக்கு புரியாமல் தடுமாறவே ஒருவழியாக இந்தி தெரிந்த சிலர், அவர்கள் கதையை கேட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்களது தாய் ரொஸ்பெக்கை சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிரமான காசநோய் தொற்று இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள், ரொஸ்பெக்கை, காசநோய்க்கு பிரத்தியேக சிகிச்சை வழங்கக்கூடிய தோப்பூர் நுரையீரல் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

தோப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், 'ரொஸ்பெக்'கை காப்பாற்ற முடியவில்லை. உறவினர்களை தேடி வந்த இடத்தில் மொழி தெரியாமல் தடுமாறி தங்களுக்கு ஒரே ஆதரவான தாயையும் இழந்து திக்கு தெரியாமல் ஆதரவற்று நின்ற இரு குழந்தைகளையும், தோப்பூர் அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் காந்திமதிநாதன் அரவணைத்தார். ஆனால், அந்தக் குழந்தைகளையும் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கும் அவரது தாயிடம் இருந்து காசநோய் வந்திருந்தது உறுதியானது. இருவரையும் மருத்துவ மனையில் தங்க வைத்து 8 மாதங்கள் சிகிச்சை வழங்கி அந்த நோயில் இருந்து மீட்டனர். 

இந்த சிகிச்சை காலத்தில் மருத்துவர்கள், அங்கு பணியாற்றும் பணியாளர்கள் பலரும் இக்குழந்தைகளை தங்கள் பிள்ளைகளை போல் பாசம் காட்டி, பழகி அந்த இருவருக்கும் தாயை இழந்த வலி தெரியாமல் அவர்களுடன் நெருக்கமாகிவிட்டனர். மேலும், காலப்போக்கில் அங்கிருந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஊழியர்கள் நன்கு பேசி பழகியதில் இரு குழந்தைகளும் தமிழ் நன்றாக கற்றுக் கொண்டனர். அக்குழந்தைகளுக்கு தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையே பிறந்த வீடுபோல் ஆனது. நோய் குணமடைந்த நிலையில் சமூக நலத்துறை மூலம், அரசு விடுதியில் இருவரையும் தங்க வைத்து படிக்க வைத்தனர். 

இருப்பினும், பள்ளி விடுமுறை நாட்களில் இருவரும் மருத்துவமனைக்கு ஓடி வந்துவிடுவார்கள். இந்நிலையில், ரீட்டா 10-ம் வகுப்பு முடித்து 18 வயது முடிந்த நிலையில் அவர், மீண்டும் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கே வந்துவிட்டார். அவர், வேறு எங்கும் செல்ல போக விருப்பமில்லாமல் மருத்துவமனையிலே தங்க அடம்பிடித்தார்.

அவரின் பாசத்தில் நெகிழ்ந்துப்போன மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி காசநோயாளிகளுக்கு உதவும் தற்காலிக பணி ஒன்று போட்டுக்கொடுத்து மருத்துவமனையிலே தங்கி பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். தற்போது ரீட்டாவுக்கு வயது 22 ஆன நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க மருத்துமனை மருத்துவர்கள், பணியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும்., மதுரையில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் ஜோசப் என்ற இளைஞரை சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் செய்து. ஜூன் 14-ம் தேதி புதன்கிழமையான நேற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். 'ரீட்டா'வின் தம்பி அலெக்ஸ், ஐடிஐ படிக்கிறார். மருத்துவமனையில் 'ரீட்டா', அவரது தம்பியுடன் பழகிய நோயாளிகள், மற்றவர்களை திருமண நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்துமாறு தோப்பூர் மருத்துவர்கள், பணியாளர்கள் திருமண அழைப்பிதழ் அச்சடித்து அழைப்பு விடுத்து நடைபெற்ற இந்த திருமணம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மணப்பெண் ரீட்டாவிற்கு மருத்துவமனை மருத்துவர்கள் சீர்வரிசையாக, வீடு கட்டுவதற்காக அவனியாபுரம் அருகே வளையங்குளத்தில் ஒன்றரை சென்ட் பிளாட், 6 பவுன் நகை, கட்டில், பீரோ வாங்கி வைத்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு இந்த சீர்வரிசைப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

தேப்பூர் அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் வடமாநில குழந்தையை திருமணம் செய்துவைக்கும் மனித நேயத்தின் பின்னணியில் மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தின வேலு முக்கிய நபராக உள்ளார். அவர் அந்தப் பெண்ணிற்கான திருமண காரியங்களையும் உதவிகளை செய்ய அனுமதி வழங்கியதோடு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே தற்காலிக பணியும் போட்டுக் கொடுத்து அவரது எதிர்கால வாழ்விற்கு அடித்தளமும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!