கலையிழக்கும் மொய் விருந்துகள்!

கலையிழக்கும் மொய் விருந்துகள்!

புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் நடைப்பெறும் பாராம்பரிய விழாவான மொய் விருந்து விழா கலை இழந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும் நடைப்பெறும் இந்த மொய் விருந்து விழா காலங்கள் கடந்தும் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. ஆனால் தற்போது இவை கலை இழந்து காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஆனி மாதமே மொய் விருந்து விழாக்கள் தொடங்கினாலும் கடந்த காலங்களை போல் தற்போது மொய் விருந்து விழாக்களை நடத்தவும் விழாக்களுக்கு வருகை தருவதற்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று வேதனையோடு தெரிவிக்கின்றனர் விழா தாரர்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் இந்த மொய்விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு,மாங்காடு, மேற்பனைக்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், குலமங்கலம், பெரியலூர், மறமடக்கி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிவிட்டது.

அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் மொய் விருந்து விழாக்களில் நாள்தோறும் பல லட்சங்கள் குவிய தொடங்கியுள்ளதாகவும், கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் பணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு அதனை விட கடந்து அதிக அளவிலான வர்த்தகமும் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சில மொய் விருந்து விழா ஏற்பாட்டாளர்கள்.

அதே வேளையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரு மாவட்ட எல்லை கிராமங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளால் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் உருக்குலைந்து போனதால் அதிலிருந்து மொய்விருந்து விழாக்கள் சரிவை சந்திக்க தொடங்கி விட்டதாகவும், அதன் பின்பு கொரோனா பெருந் தொற்று ஏற்படுத்திய பெரும் துயரம் ஒட்டுமொத்தமாக இந்த இரு மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை முடக்கிவிட்டதாகவும் இதனால் மொய் விருந்து விழாக்களும் இன்றைய காலகட்டத்தில் கலை இழக்க தொடங்கி விட்டதாகவும் பொருளாதார ரீதியில் பெரும்பாலானோர் பின்னடைவை சந்தித்து வருவதால் இந்த மொய் விருந்து விழாக்களில் இருந்து வெளியேறி வருவதாகவும் விழா தாரர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த மொய் விருந்து விழா காலகட்டத்தில் மளிகை கடை வியாபாரம் ஆட்டு இறைச்சி வியாபாரம் காய்கறி, வாழை இலை வியாபாரம் பத்திரிக்கை பிளக்ஸ் பேனர் உள்ளிட்ட அச்சக வணிகம் சமையல் கலைஞர்களுக்காண வேலை வாய்ப்பு,மொய் எழுதும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என பெரிய அளவிலான வர்த்தகமும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த மூன்று மாத காலகட்டத்தில் வர்த்தக ரீதியில் இந்த பகுதி வணிகர்களும் அதே போல் தொழில் ரீதியில் சமையல் கலைஞர்களும் மொய் எழுதுபவர்களும் பயனடைவார்கள் என்றும் ஆனாலும் கூட பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் இந்த விழாக்கள் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருவது வேதனை அளிப்பதாகவும் விழாதரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாணயம் கருதி நூற்றுக்கு 99 சதவீத மக்கள் செய்த மொய்யை திரும்ப செய்து விடுவார்கள் என்றும் ஆனால் புதிய மொய் செலுத்துபவர்கள் குறைந்து வருவதால் மொய் பெறுவதில் விகிதாச்சாரம் குறைவதாகவும் குறிப்பாக இந்த ஆண்டு மொய் விருந்து நடத்தும் ஒருவர் சராசரியாக 10 லட்சம் ரூபாய் மொய்த்தொகையாக பெற வேண்டிய சூழலில் இந்த ஆண்டு ஆறு லட்சம் முதல் 7 லட்சம் வரை மட்டுமே மொய் வசூல் ஆவதாகவும் இதே நிலைமை நீடித்தால் இன்னும் வருகின்ற காலத்தில் இந்த விழாக்கள் விழிம்பு நிலைக்கு சென்று விடும் என்றும் விழாதாரர்கள் விரக்தியோடு தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இந்த இரண்டு மாவட்ட எல்லை கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படாததால் இந்த கலாச்சாரம் சார்ந்த விழாக்களும் கலை இழந்து வருவதாகவும் மீண்டும் கடந்த காலத்தை போல் வேளாண்மை செலுத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டால் மட்டுமே இந்த இரு மாவட்ட எல்லை கிராமங்களிலும் மொய் விருந்து கலாச்சாரம் காலங்கள் கடந்தும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மொய் விருந்து தாரர்கள்.

இதையும் படிக்க:சிம்பு, விஷாலை தொடர்ந்து தனுஷ் உள்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி?