இடைக்கால பொது செயலாளராக ஈபிஎஸ் -ஐ நியமிக்க முடியாது...ஆதாரங்களுடன் விளக்கும் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்...

இடைக்கால பொது செயலாளராக ஈபிஎஸ் -ஐ நியமிக்க முடியாது...ஆதாரங்களுடன் விளக்கும் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்...

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக அறிக்கை ஒன்று கசிந்திருந்தக்கூடிய சூழலில், அப்படி அவர் பொது செயலாளராக நியமிக்கப்பட்டால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த மாதிரியான சாவல்கள் இருக்கும் என்பது பற்றி மாலைமுரசு இணையத்தில் இருந்து மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த நேர்காணல் குறித்து பார்க்கலாம். 

சுஜிதா : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே, ஏன்? பொதுச்செயலாளராக நேரடியாக ஈபிஎஸ்-ஐ நியமிக்க முடியாத சூழல் உள்ளதா? 

பிரியன் : முதலில் இடைக்கால பொதுச்செயலாளராகவே  அவரை நியமிக்க முடியாது. கடந்த 2017 ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படை சட்ட விதிகளை மாற்றி இருக்கிறார்கள். அந்த சட்ட விதிகளை மாற்ற வேண்டும். பின்னர், அதன் படிஅடிமட்ட தொண்டர்களால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியே, ஈபிஎஸ் பொது செயலாளராகவோ அல்லது இடைக்கால பொது செயலாளராகவோ மாற்றிக்கொள்ள விரும்பினால், தேர்தல் நடத்தி, அதற்கு அடிமட்ட தொண்டர்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுக்குழுவிலேயே இதை முடிவு செய்வதற்கான வாய்ப்பில்லை. முன்னதாக இந்த பொதுக்குழுவே அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழுவா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், பொதுக்குழுவிற்கு அழைத்தத்தில் தலைமை கழக நிர்வாகிகள் என போடப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுகுழுவை கூட்டுவதற்கான உரிமை கிடையாது. இன்றைய தினத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருமே அரசியல் ஆணையத்தில் உள்ளனர். அவர்கள் தான் பொது குழுவை கூட்ட முடியும். ஆகவே கூடப்போகிற கூட்டம், எடப்பாடி ஆதரவாளர்களின் கூட்டமாக இருக்குமே தவிர, அதிமுக பொதுகுழுவாக இருக்காது என்பது என்னுடைய கருத்து..ஆகையால் அதில் தேர்ந்தெடுக்கபடுகிற எந்த பதவியும், ஓபிஎஸ் தரப்பினரால் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் கொண்டு செல்லப்படும். ஈபிஎஸின் இந்த முயற்சி பலவிதமான சட்ட சிக்கல்களை சந்திக்கும். 

சுஜிதா :   இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டால் அவருக்கான அதிகாரங்கள் என்ன? 
 
பிரியன் : முன்னதாக 2017 ம் ஆண்டு ஜனவரியில் இடைக்கால பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கும். பின்னர் அவர் சிறை சென்ற பிறகு, 2107 ம் ஆண்டு செப்டெம்பரில், சட்டம் மாற்றப்பட்டது. அந்த பொதுக்குழுவே செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என சொல்லவேண்டுமானால் அதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை ஈபிஎஸ் இடைக்கால பொது செயலாளராக சொல்லிக்கொள்ள முடியாது. நிர்வாகிகள் வேண்டுமானால் இவரது பக்கம் இருக்கலாமே தவிர, தொண்டர்களும் இவர்கள் பக்கம் இருப்பார்கள் என சொல்ல முடியாது. ஈபிஎஸ் பெயருக்காக போட்டுக்கொள்ளலாமே தவிர அதிகாரபூர்வமாக பொது செயலாளராக செயல்பட முடியாது. 

சுஜிதா :  இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, 'கட்சி கட்டுப்பாட்டை மீறியுள்ளார் ஓபிஎஸ்'  எனக்கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? 

பிரியன் : இடைக்கால பொது செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட முறையே சரியில்லாத போது, அவருக்கு நீக்குவதற்கான அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்தில் சட்ட விதிகளை மாற்றாத வரை ஓபிஎஸ் க்கு எல்லா விதமான அதிகாரங்களும் உள்ளது. தலைமையில் உள்ள இருவர்களுக்குமான பிரச்சனை தீரும் வரை, இருவரில் யார் ஒருவர் எடுக்கும் முடிவும் செல்லாது. இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு மட்டும் தான் செல்லுபடியாகும். அதனால் எடப்பாடி ஆதரவாளர்கள், என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஓபிஎஸ் க்கு நீதிமன்றம் செல்வதற்கும், தேர்தல் ஆணையம் செல்வகற்கும் எல்லாவிதமான அதிகாரங்களும் உள்ளது. இறுதியில் தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது.

சுஜிதா : இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டால் ஓபிஎஸ் முன் உள்ள சவால்கள் என்ன? அதனை ஓபிஎஸ் எப்படி எதிர்கொள்வார்? 

பிரியன் : ஓபிஎஸுக்கு இருப்பது சட்ட சவால்கள் தான். இந்த முடிவுகள் செல்லாது என அவர் நீதிமன்றம் செல்லலாம். " நான் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பொதுக்குழு கூட்டத்திற்கான அதிகாரங்கள் நிர்வாகிகளுக்கு கிடையாது. அதனால் அந்த கூட்டமே செல்லாது, சட்டவிரோதமானது. நாங்கள் அடிமட்ட உறுப்பினர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டோம். அதனால் எங்களை நீக்குவதற்கான உரிமை யாருக்கும் கிடையாது." என இப்படி பலவிதமான காரணங்களில் ஓபிஎஸ் நீதிமன்றங்களை நாடலாம். தற்போது, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழு என்ற பெயரில் அவர்களின் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துவாரானால், அதில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் கேள்விக்குறியாக்கப்படும். ஓபிஎஸ் மீண்டும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் சட்ட போராட்டம் நடத்துவார். அதே சமயம், தமிழ்நாடு முழுக்க சென்று எந்த பொது செயலாளர் பதவியை நிரந்தரமாக ஜெயலலிதா அவர்களுக்காக ஒதுக்கினோமோ அந்த பதவியை ஈபிஎஸ் எடுத்துகொள்வதன் மூலமாக அம்மாவுக்கு செய்த துரோகம் என ஓபிஎஸ் பிரச்சாரம் செய்தால் அது தொண்டர்கள் மத்தியில் எடுபடும். முன்னதாகவே, அம்மாவிற்காக ஒதுக்கப்பட்ட பதவியை எப்படி ஈபிஎஸ் எடுத்துக்கொள்ள முடியும். அப்படியென்றால் ஈபிஎஸ் என்ன அம்மாவுக்கு நிகரானவரா? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. ஏற்கனவே பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது, தொண்டர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை கொடுத்துள்ளது. இந்நிலையில் பொது செயலாளர் பதவியை ஈபிஎஸ் எடுத்துக்கொள்ள இருப்பதால் தொண்டர்கள் மிகுந்த கோபத்தல் உள்ளனர். இது அம்மாவிற்கே உரிய பதவி என்பதால் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்ற கேள்வி உள்ளது. அதனால் தொண்டர்கள் மத்தியில் அனுதாபங்கள் ஓபிஎஸ் பக்கம் இருப்பதை பார்க்க முடிகிறது. நிர்வாகிகள் வேண்டுமானால் ஈபிஎஸ் பக்கம் இருக்கலாமே தவிர, தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளனர் என்பது என்னுடைய கருத்து என கூறி முடித்துவிட்டார்.