முன்னாள் அமைச்சர்களை டார்கெட் பண்ணும் சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை!! அதிர்ந்துகிடக்கும் அதிமுக வட்டாரம்!!

தமிழகத்தில் முக்கிய துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அடுத்தடுத்து தமிழக முன்னாள் அமைச்சர்கள் மாட்டப்போவதால் அதிமுக வட்டாரங்கள் பீதியடைந்துள்ளனர்.  

முன்னாள் அமைச்சர்களை டார்கெட் பண்ணும் சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை!! அதிர்ந்துகிடக்கும் அதிமுக வட்டாரம்!!

தமிழகத்தில் முக்கிய துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அடுத்தடுத்து தமிழக முன்னாள் அமைச்சர்கள் மாட்டப்போவதால் அதிமுக வட்டாரங்கள் பீதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்து வந்தது. இந்த காலத்தில் அமைச்சர்கள் முதல் அதிமுக ஊராட்சி தலைவர்கள் வரை ஊழல் செயாத ஆளே இல்லை என சொல்லும் அளவிற்கு ஊழல் செய்யப்பட்டது. இதுஒருபுறம் இருக்க தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால், முதல்வராக இருந்த எடப்பாடி தற்போது எதிர்கட்சி தலைவராகவுள்ளார். எனினும் இவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மோதல் போக்கு என்பது மறைமுகவும், சில இடங்களில் வெளிப்படையாகவும் தெரியவருகிறது. இதனால் தற்போது அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாத நிலை நீடித்தே வருகிறது. எனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தோழியான சசிகலாவும் அதிமுகவை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே திமுக ஆட்சியில் இருப்பதால் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை களையெடுக்க ஆரம்பித்து வருகின்றனர். இதனால் என்றைக்கு எந்தப் புற்றிலிருந்து எந்தப் பாம்பு கிளம்புமோ என்று ஆடிப்போயிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் பலரும்.

இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனாவுக்கான மருந்து, முன்களப்பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்டவற்றிலும் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று, இந்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் அச்சிடுவதற்குத் தரப்பட்ட ஒப்பந்தம், புதிய அரசால் ஆராயப்படும் சூழலில், இதற்கான கமிஷனாக 25 கோடி ரூபாயை கடந்த ஜனவரியிலேயே வாங்கப்பட்டு விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சென்னை புறநகரில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், பல ஏக்கர் பரப்பளவுள்ள பஞ்சமி நிலத்தையும், அரசு புறம் போக்கு நிலங்களையும் போலி ஆவணங்கள் தயாரித்து, பட்டா போட்டு, மாநில அரசின் நிலத்துக்கு மத்திய அரசிடம் இழப்பீடு வாங்கியது கோட்டை வட்டாரத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரையும் அதிர வைத்துள்ளது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் பீமன்தாங்கல் கிராமத்தில் 82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், போலி ஆவணங்களால் பட்டா போட்டு, அதற்கு மத்திய அரசிடம் இழப்பீடு வாங்கி விட்டனர். புகாரின் அடிப்படையில், அரசு அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது 7 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எனினும் இதை இத்தோடு விடாமல் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.  இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால் தமிழக அரசு சிபிஐக்கு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.