6 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை... பெங்களூரு சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்...

கிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

 6 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை...  பெங்களூரு சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்...

சாதனை புரிவதற்கு வயது ஒரு அளவு கோல் கிடையாது என்பதை தினசரி நாம் பார்த்து வருகிறோம்.சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை ஏதாவதொரு வகையில் அவ்வப்போது சாதித்து கொண்டேதா இருக்கின்றனர். அப்படி பெங்களூருவை சேர்ந்த 6 வயது சிறுவன், உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரை பற்றிய சுவாரசியமிக்க செய்தி தொகுப்பை இங்கே பார்ப்போம்:-

பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வருபவர் ஸ்ரீவிஜய். இவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி, கம்ப்யூட்டர் என்ஜீனீயராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியருக்கு 6 வயதில் தருண் என்ற மகன் உள்ளான். அதனால், மனைவி வசந்தி தனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்தபடியே தன் மகனை பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். அதேசமயம் அவரிடம் இருந்த திறமைகளை கண்டுபிடித்த  தாயார் வசந்தி,அவரை சரியான பாதையில் முன்னேற்றி சென்றுள்ளார். தருண் 14 மாத குழந்தையாக இருந்தபோது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவருக்கு ‘‘ஆசிய ஸ்மார்ட் குழந்தை’’ என்ற விருது கிடைத்தது. மேலும், அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதும் கிடைத்தது. அடுத்ததாக சுயமாக கற்றலில் திறன் படைத்த தருண், அதற்காக இந்திய புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெற்ற விண்வெளி தொடர்பான போட்டியில் பங்கேற்ற தருண் 59-வது இடத்தை பெற்றார். இப்படி 5 வயது கூட ஆகாத சிறுவனால் இவ்வளவு உலக சாதனை பண்ண முடியுமா? என்று கேட்கும் நிலையில்  பல்வேறு சாதனைகளை புரிந்து இளம் சாதனையாளர் தருண் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ளார். 

சிறுவன் தருண், 14 மாத குழந்தையாக இருந்தபோதே விண்வெளியில் உள்ள பொருட்களை அடையாளம் காண தொடங்கியுள்ளான்.பிறகு படிப்படியாக விண்வெளி மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் மிகுந்த ஆர்வத்தை காட்டிய தருண், தனது 3-வது வயதில் அனிமேஷன், ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்க தொடங்கினார். அந்த திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலிப்பாக தான் இந்த இடம் தருணுக்கு கிடைத்துள்ளது என்பதில் ஆச்சரியம் இல்லை.

தற்போது, உலகின் மிக இளம்  கிராபிக் டிசைனர், கிரியேட்டிவ் விண்வெளி டிசைனர் மற்றும் ஆன்லைன் விளையாட்டை உருவாக்குபவராக திகழும் தருண்,இதுவரை 80 கிராபிக் படங்களை வரைந்துள்ளார். அதை பார்க்கும்போது, இது 5 வயது குழந்தை தான் உருவாக்கியதா? என்று சந்தேகத்தை எழுப்பும் வகையில், அவ்வளவு நேர்த்தியாக அவற்றை வரைந்துள்ளார். தற்போது எம்.எஸ். பெயிண்ட், 3டி அனிமேசன் மற்றும் பல்வேறு மென்பொருள்களை உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில்,விண்வெளித்துறையில் தருணுக்கு உள்ள ஆர்வத்தை கண்ட இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், அந்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த சிறுவனின் அழகிய தருணங்களை பற்றி தாயார் வசந்தி கூறியபோது, தொடக்கத்தில் நாங்கள் மலேசியாவில் வசித்து வந்தோம்,பிறகு தருண் பிறந்ததையடுத்து அவரது எதிர்காலம் கருதி நான் வேலையை விட்டுவிட்டு, பெங்களூருவுக்கு வந்துவிட்டேன். 

பொறுப்பாக கவனிக்க ஆரம்பித்த பிறகு அவனுக்கு அறிவியல் துறையில் இருந்த ஆர்வத்தை கண்டுபிடித்து சரியான பாதையில் அவற்றை பயன்படுத்தினேன். அதன் காரணமாக ஒரு முறை இஸ்ரோ தலைவரை நேரில் சந்தித்து பேச வாய்ப்பும் கிடைத்தது. அப்போது குழந்தையின் திறமையை கூறி அவர் பாராட்டினார். தருண் சுயமுயற்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கியது,அனிமேஷன் படங்கள், விண்வெளி குறித்த கிராபிக்ஸ் படங்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வரைந்தது தான் உலக சாதனை புத்தகத்தில் தருணின் பெயரை சேர்ப்பதற்கு வழிகாட்டியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல்,குழந்தைகள் தினத்தன்று கவர்னரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எங்களுக்கு தகவல் வந்துள்ளதாக வசந்தி மிக பெருமையுடன் கூறியுள்ளார்.

என்னதான் நாம் அந்த சிறுவனின் சாதனைகளை பாராட்டினாலும்,அவரின் திறமையை துள்ளியமாக கண்டு அவற்றை சரியான பாதையில் எடுத்து சென்று வெற்றிபாதையை காண்பித்த அவரின் தாயாருக்கே அனைத்தும் உரியதாகும் என்பதை யவராலும் மறுக்க முடியாத ஒன்று.தாய்மைக்கான பொறுப்பை செவ்வனே செய்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.