ஓ.பி.எஸை ஆதரிக்குதா பாஜக..?...சர்ச்சையானது அண்ணாமலை ட்வீட்...!

ஓ.பி.எஸை ஆதரிக்குதா பாஜக..?...சர்ச்சையானது அண்ணாமலை ட்வீட்...!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவு, பாஜக ஓ.பி.எஸ் க்கு தான் சாதகமாக இருக்கிறதா? என்ற சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அதிமுக பிளவு:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்ததையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது.

ஜூலை 11:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் இடைக்காலப் பொதுசெயலாளர் ஆனார். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கலவரம் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின் சீலை அகற்றக்கோரி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கம்:

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற பின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் ஓ.பி.எஸ் நீக்கப்பட்டார். அதேபோன்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்பட்டதாகவும், எம்.பி.ரவீந்திரநாத்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஈ.பி.எஸ் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றும் எழுதினார். 

ஈ.பி.எஸ் ஸின் கடிதத்தை மறுக்கும் ஓ.பி.எஸ்:

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் ரவீந்திரநாத்தை நீக்கியதாக ஈ.பி.எஸ் எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார்.

டெல்லி சென்ற ஈ.பி.எஸ்:

இப்படி கட்சி இரண்டாக பிளவு பட்டதையடுத்தும், ஜுலை 11 ஆம் தேதி இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்றதையடுத்து வெடித்த கலவரத்திற்கு இடையிலும், நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக நான்கு நாட்கள் டெல்லி பயணம் மேற்கொண்ட ஈ.பி.எஸ், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்வதற்காகவும், குடியரசு தலைவர் பதவி வகிப்பதில் கலந்து கொள்வதற்காகவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி அங்கு சென்று  குடியரசு தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரெளபதியையும், பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து கூறினார். பிறகு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்துக்கொண்டார்.

சென்னை திரும்பிய ஈ.பி.எஸ்:

திரௌபதி முர்மு வரும் திங்கள்கிழமை நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் சென்னை திரும்பினார். ஏனென்றால், நாளை நடைபெறும் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் நேரம் வழங்கப்படாத காரணத்தால் ஈபிஎஸ் குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இந்நிலையில் அமித்ஷா மற்றும் மோடி இருவரும் ஈபிஎஸ் சந்திப்பிற்கு நேரம் வழங்காதது ஓ.பி.எஸ்.ஸின் அழுத்தம் தான் காரணம் எனவும், இதனால் ஈபிஎஸ் அதிருப்தியுடன் சென்னை திரும்புவதாகவும் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

அண்ணாமலை ட்வீட்:

இந்த மாறியான சூழ்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ட்வீட் மேலும் சர்ச்சையை எழுப்பி வருகிறது. அதாவது ”குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசாரவிழாவில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன்” என்ற அண்ணாமலையின் பதிவு, பாஜக ஓ.பி.எஸ் க்கு தான் சாதகமாக இருக்கிறதா? என்ற சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஏனென்றால், ஈ.பி.எஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை தவிர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதிமுக பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அவரை, ”எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” என அண்ணாமலை பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. ஒருவேளை பாஜக ஓ.பி.எஸை தான் ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மு.க.ஸ்டாலின் பதிவு:

முன்னதாக, தமிழ்நாடு முதல்வரும் ”கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக நலம் பெற விரும்புகிறேன்” என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வரும் நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பி.எஸ் என்று  அப்போது மு.க.ஸ்டாலின் கூறியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.