அழகிரி 2.O - 5 மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ள திமுக !

அழகிரி 2.O - 5 மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ள திமுக !

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்த நிலையில் கொரோனாவில் தொடங்கிய அமைச்சர்கள் வீடுகளில் சோதனை வரை பல்வேறு சவால்களுடன் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியை வலுப்படுத்த மாவட்டங்களை பிரித்து மற்றும் மண்டலங்களை உருவாக்கி பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளதாக திமுக மேல்மட்ட வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. கடந்த பொதுக்குழுவில் ‘ஒரு பக்கம் தி.மு.க. தலைவர்; இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதல்வர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழலில் இருக்கக் கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் நாள்தோறும் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது. என்று பேசிய முதலமைச்சரின் பேச்சிற்கு பிறகும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் மீண்டும் மீண்டும் புதிய சர்ச்சைகளில் சிக்கி வருவதால் மு.க.ஸ்டாலின் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ.வழியில் கண்காணிப்பு குழு:

முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி யாருடைய இடமும் நிரந்தரம் இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின் படி உறுப்பினர்கள் நிர்வாகிகள் மாற்றப்பட்டு கொண்டு இருப்பார்கள். அதுபோல திமுகவிலும் அதிரடி நடவடிக்கைக்கு ஸ்டாலின் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கறாராக பேசிய மு.க.ஸ்டாலின்,  யாராக இருந்தாலும் எந்த தயவுதாட்சணையும் கிடையாது என்றும் கூறியுள்ளார். இந்நிலையில்  செயல்பாடுகள் இல்லாத இரண்டு மாவட்ட செயலாளர்களை கூடிய விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கப்பட்டு, ஒரு மாவட்ட  செயலாளர்களுக்கு அதிகபட்சமாக 4 தொகுதியும் குறைந்த பட்சம் 2 எனவும் சட்டமன்ற தொகுதிகளையும் பிரிக்கப்படவுள்ளது. 

இதையும் படிக்க : ஜூலை 18 : மறைந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த தினம்...தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!

மண்டலங்கள் பிரிப்பு:

திமுக கட்சியில் மீண்டும் மண்டல அமைப்பு செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொதுவாகவே திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சியர் பதவி போன்று கருதப்படும். தற்போது மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்காக தென்மண்டலம், கொங்குமண்டலம், டெல்டா மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என பிரிக்கப்படவுள்ளது. புதிதாக வரையறுக்கப்பட்ட மாவட்டங்கள் எந்த மண்டலங்களுக்கு கீழ் வருகிறது என்பது குறித்து தெளிவான வரையறைகள் கூறப்படவில்லை. மேலும் மண்டல அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் அமைச்சர் பதவியில்லாதவர்களையே தேர்வு செய்ய உள்ளனர். தற்போது மாவட்ட செயலாளர்களாக உள்ளவர்கள் அமைப்பு செயலாளர்களாக மாறவும் வாய்ப்புள்ளது. மாவட்ட செயலாளர்-அமைப்பு செயலாளர் என இரட்டை பதவி வகிக்ககூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீண்டகால விசுவாசிகளான சாக்கோட்டை அன்பழகன், பூண்டி கலைவாணன் ஆகியோருக்கு டெல்டா மண்டல அமைப்பு செயலாளர்களாக வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. டி.ஆர்.பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கிய நிலையில் அப்செட்டில் உள்ள இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் திருச்சி எந்த மண்டலத்திற்குள் வரவுள்ளது என்பது இதுவரை தெரியவில்லை. சேலம் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளை பொறுத்து டி.எம் செல்வகணபதி, எஸ்.ஆர் சிவலிங்கம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் புது முகங்களும் மாவட்ட செயலாளர்கள் ஆகவும் வாய்ப்புள்ளது. 

தென் மண்டலம்: 

மூத்த தலைவரும் சிறுகதை மன்னனுமான எஸ்.எஸ். தென்னரசு வகித்த தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தமைக்காக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு வழங்கப்பட்டது. மேலும் 2006-2011 காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் திமுகவின் அனைத்து செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் சிலர் அன்றைக்கு ;அழகிரியார் மாவட்டம்’ என்று போஸ்டர் ஒட்டுமளவிற்கு  ஆட்சியையும் கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சில ஆண்டுகளாக முற்றிலும் விலகியிருந்த அழகிரி மீண்டும் களத்தில் இறங்கவுள்ளதாக தெரிகிறது. 2024 மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் துரை அழகிரி என மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர்களாகவே ஒட்டிவிட்டனர். சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டுள்ளனர் அதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார நாடாளுமன்ற  தொகுதிகளில் திமுகதான் நிற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் வழங்கப்படுவது சிறிது சந்தேகமே, ஆனால் திமுக வேட்பாளராக நிறுத்த மதுரையில் பலமான வேட்பாளர் தற்போது இல்லை என்பதே நிசப்தம். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மட்டுமே எந்த வித பதவிகளிலும் இல்லாமல் உள்ளார் ஆனால் அவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிறார். முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்திற்கு வயது மூப்பால் அவரால் நிற்க இயலாது. 

மீண்டும் இணைவதில் நடைமுறை சிக்கல்:

தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாள் கடந்த வாரம்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் அழகிரி கட்சிக்கு வரும்போது ஏற்கனவே அழகிரியிடம் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் அவருக்கும் மீண்டும் மனகசப்பு ஏற்படலாம். அழகிரியிடம் உள்ள முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், எம்.எல்.ராஜ், கோபிநாதன், முபாரக் மந்திரி, இசக்கி முத்து உள்ளிட்டோருக்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்படும். தொண்டர்களிடையே உள்ள பழையவற்றை அனைத்தையும்  மறந்து செயல்பட்டால் மட்டுமே அழகிரியால் மீண்டும் தம்வசம் திமுகவை கொண்டு வர முடியும். ஆனால் மு.க.அழகிரிக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எல்லாம் இல்லை, தன் மகள் மற்றும் பேரன்களுடன் வெளிநாட்டில் சந்தோசமான அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதால் அதை விடுத்து வருவது சந்தேகமே, ஆனால் மகனின் எதிர்காலம் கருதி மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு தரப்பு கூறப்படுகிறது. தற்போது திமுக உள்ள சூழலில் அழகிரி கம்பேக் வேண்டும் என்பதே மதுரையிலுள்ள கடைநிலை உடன்பிறப்புகளின் ஆவலாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட மு.க.அழகிரியின் வலதுகரமாக உள்ள இசக்கி முத்து தென் மாவட்டத்தில் திமுகவை காப்பாற்றியது அழகிரி தான். மதுரையில் நிர்வாகம் மன நிறைவாக இல்லை எனவும் மு.க அழகிரி திமுகவில் இணைத்து பணியாற்றவில்லை என்றால் 2024 வது தேர்தல் திமுகவுக்கு சோதனையான தேர்தலாக அமைந்து விடும் என்று பேசியிருந்தார். இந்நிலையில் திமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- மா.நிருபன் சக்கரவர்த்தி