கள்ளக்குறிச்சியில் எஸ்.பி.யை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாற்றம்..!

கள்ளக்குறிச்சியில் எஸ்.பி.யை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாற்றம்..!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வன்முறையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்:

சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தை தொடர்ந்து, கடந்த 17ஆம் தேதி மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள்  பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் தீ வைத்து எரித்தனர்.  இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்ததில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். 

பொதுமக்கள் அமைதி காக்க வலியுறுத்தல் : 

இதனைதொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு, போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறை செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்தில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை விதிக்கப்படும் அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார்:

பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர்களை  கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிறப்புக்குழு அமைத்து அனைவரையும் கைது செய்ய திட்டமிட்டது. 

சிறப்பு புலனாய்வுக் குழு:

அதன்படி கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து விசாரிக்க டிஜஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்புக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இந்த புலனாய்வுக்குழுவில் ஆவடி பட்டாலியன் கமாண்டன்ட் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள்  இடம் பெற்றுள்ளனர்.  

முதலில் கள்ளக்குறிச்சி எஸ்.பி.பணியிட மாற்றம்:

இதனையடுத்து டிஜிபி சைலேந்திர பாபு அமைத்த இந்த சிறப்பு புலனாய்வு குழு தனது பணியை துவங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி. அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறையின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி புதிய எஸ்.பி.யாக திருவெல்லிகேணி காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்த பகலவன் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்.பி.யை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம்:

முதலில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர்,

சென்னை கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஜவன்குமார் ஜவ்வத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.