2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சரிவிற்கு காரணமான அரசு ஊழியர்கள் போராட்டம்!

2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சரிவிற்கு காரணமான அரசு ஊழியர்கள் போராட்டம்!

2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ஊழியர்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்ததும், அதன் விளைவாக 2004 ஆம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இழந்து சரிவடைந்தததை பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2 வது முறைாக முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு பணிகளில் இருந்த ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் 1.4. 2003-ல் அமல்படுத்தப்பட்டது.  இத்திட்டத்தின் படி ஓய்வு பெற்றதற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பணபலன்கள் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படாது. அவை நிதி பத்திரங்களாக சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்கள் பெற்று வந்த சரண் விடுப்பு ஒப்படைப்பு ரத்து, ஒய்வூதிய தொகுப்பு 40% என்பது 33.33% சதவீதமாக குறைக்கப்பட்டது என அரசு ஊழியர்களுக்கு எதிரான 5 அம்சங்களை இந்த அறிவிப்பு கொண்டிருந்தது. 

இந்நிலையில் இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்தன. புதிய ஓய்வூதிய நடவடிக்கைகள், அரசு துறைகளில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் காலி பணியிடங்களை நிரப்பாதது ஆகியவற்றிற்கு எதிராக ஜூலை 2 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. ஆனால் இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக அப்போதைய முதலமைச்சர் எஸ்மா சட்டத்தை கையில் எடுத்திருந்தார். 

எஸ்மா சட்டம் :

1981 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது தான் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம். இந்த சட்டம், போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. 

அதாவது, அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டாலோ, போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலோ, கூடுதல் நேரம் வேலை செய்ய மறுத்தாலோ ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அதேசமயம், அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், உடனடி பணி நீக்கம் செய்யவும், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிப்பதற்கு இச்சட்டத்தில் இடம் உண்டு. 

அரசு ஊழியர்கள் கைது

இந்த கொடிய சட்டத்தைதான் டெஸ்மா என்ற பெயரில் 2003 ஆம் ஆண்டு மறுவார்ப்பு செய்திருந்தது அப்போதைய அதிமுக அரசு. அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்த அந்த நாளுக்கு முன்னதாகவே ஜூன் 30 ஆம் நாள் இரவோடு இரவாக ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பேருந்தை மறித்தல், பேருந்தை எறிக்க முயற்சி, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் பெண் அலுவலர், ஆசிரியைகளின் கையை பிடித்து இழுத்தல் , பணிக்கு செல்பவர்களை தடுத்தல் , அரசு உடமைகள் சேதப்படுத்துதல், களவாடுதல், தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டன.

இருப்பினும் திட்டமிட்டப்படி 2 சூன் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. இதில் முதல் நாளான 2 சூலை அன்று 90% அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடடத்தில் கலந்து கொண்டனர். எந்த அரசு அலுவலங்களும் செயல்படாமல் ஸ்தம்பித்து போயின. தலைமை செயலக ஊழியர்கள் கூட போராட்டத்தில் குதித்திருந்தனர். இதனால் முதலமைச்சரின் அலுவல்கள் கூட பாதிப்படைந்தது. 

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க மறுத்த ஜெயலலிதா சர்வாதிகாரத்தை கையில் எடுத்தார். ஒரே கையெழுத்து மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உட்பட 1,75,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில்  6,500 க்கும் மேற்பட்டவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டார், ஜெயலலிதா.  இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தற்காக அப்போதைய எதிர்கட்சி தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் மீது டெஸ்மா பிரிவில் வழக்கும் போடப்பட்டது.

அரசு அலுவலங்களில் இருந்த பற்றாக்குறையை நீக்க ரூ.4000 சம்பளத்திக்கு அரசு  வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவசர அவசரமாக நேர்காணல் மூலம் 15,400 க்கும மேற்பட்டோர் அரசுப் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க, கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல ஒரே அறையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டனர்.  அறைகளில் உள்ள கழிப்பிடித்தில் தண்ணீர் வசதி வழங்காதது, மின்சாரம் துண்டித்தது, குடிநீர் வழங்காதது , முதல் வகுப்பு தகுதி பெற்று வந்த அலுவலர்களுக்கு முதல் வகுப்பு தராமல் மறுத்தது , சுகாதாரமற்ற தரமில்லாத உணவு தயாரித்து வழங்கி கொடுமை படுத்தியது, உடல் நலமில்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது, ஏற்கனவே சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுள்ள குண்டாஸ் ,திருடர்கள், வழிப்பறியாளர்கள், கொலைகாரர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை மிரட்டியது என சிறைச்சலையிலும் அரசு ஊழியர்களுக்கு எதிராக கொடுமைகள் அரங்கேறின.

2004 தேர்தல் தோல்வி 

இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட  தொடர் போராட்டங்கள் மக்களிடையே அதிமுகவின் மீது எதிர்ப்பை அதிகமாக்கி இருந்தது. தொடர்ந்து நடந்த இந்த  எதிர்ப்பு போராட்டங்கள் 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான பிரச்சாரமாகவும் மாறியது. இதனையடுத்த வெளியான தேர்தல் முடிவுகள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சியை அளித்தன. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் பாண்டிச்சேரியின் 1 தொகுதி என அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை போராட்டங்களை சர்வாதிகாரமாக அடக்கிய ஜெயலலிதாவிற்கு மக்கள் வழங்கிய பரிசாகவே இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. 

கவனத்தில் கொள்ள 

தற்போதும் கூட கடந்த 11 நாட்களாக பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்கள் தொடங்கிய இப்போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களும் கலந்து கொண்டதால் இப்போராட்டம் மேலும் வலுபெற்றுள்ளது. இவர்களை இன்று காலையில் காவல்துறையினர் கைது செய்து சமுதாய கூடங்களில் அடைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாதாக திமுக கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனை நிறைவேற்றக் கோரிதான் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இவர்களின் நியாமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவற்றை மறுத்து அடக்குமுறையின் வழியாக இந்த போராட்டத்தை அடக்க முயற்சித்தால் 2004 போல வரப்போகும் 2024 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் விடயமாக இந்த போராட்டமும் அமையலாம் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து.

-ச.பிரபாகரன்
 
இதையும் படிக்க || திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு!