தமிழ்நாட்டை அச்சுறுத்தும் புதிய வகை நோய்… அலர்ட் ஆகும் மருத்துவத்துறை!

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் புதிய வகை நோய்… அலர்ட் ஆகும் மருத்துவத்துறை!

சென்னையில் கொரோனாவும் புதுச்சேரியில் காலரா நோயும் பரவத் தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு நோய் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது.  இது, மனிதர்களுக்கு நோய் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட மனிதர்கள் அன்றாட தேவைக்காக வளர்க்கும் விலங்குகளைத் தாக்கி உயிரிழக்கக் கூடிய அபாயம் உள்ளது. ஆம், மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய காச நோய் தற்போது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவி வருவதாக தமிழ்நாடு மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
எந்தெந்த விலங்குகளுக்கு பாதிப்பு: 


சென்னையில் நான்கு பண்ணைகளில் 162 கால்நடைகளை நாங்கள் பரிசோதித்ததில்  20 கால்நடைகளுக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் மருத்துவர் பி. கண்ணன் தெரிவித்துள்ளார். காச நோய்களில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவக்கூடிய ஜூனோசிஸ் என்ற காசநோய் முதல் முறையாக தற்போது கண்டறியப்பட்டது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டதாகவும் தற்போது அது தமிழ்நாட்டிலும் கண்டறியப்பட்டதாக கூறினார். 

விலங்குகள் நோய் குறித்த ஆய்வு:


பண்ணை விலங்குகள் மீதான ஆய்வானது, 2015 முதல் 2019 வரை நீடித்தது, மாண்டூக்ஸ் சோதனையைப் பயன்படுத்தி விலங்குகள் காசநோய் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் போது, ஆறு விலங்குகள் நோயால் இறந்தன மற்றும் பிரேத பரிசோதனையில் நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மடி போன்றவற்றில் காசநோய் புண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

கிண்டி தேசிய பூங்காவில் உள்ள மான்களும் கூட காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் அறிவித்துள்ளனர்.  சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உயிரினங்கள் சந்திக்கும் பாதிப்பை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை  மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் இந்த காச நோய் மூலம் தெரியவருவதாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


'காசநோய் இல்லாத இந்தியா' 2025:


2020ஆம் ஆண்டுக்கான இந்திய காசநோய் அறிக்கையின்படி  நாடு முழுவதும் 17,19,40,182 பேருக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 52,273 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காசநோய் ஒழிப்பில் இலக்கு 2025 என்ற அருகில் இருக்கும் இச்சூழலில், சமூகப் பொருளாதார பிரச்சினைகள், ஊட்டச்சத்து நெருக்கடிகள் மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. இந்தச் சவால்களைக் கடந்தால் இலக்கை எட்டுவது எளிதானதே. தனிநபர்களும் தங்களை  ஊக்குவித்துக் கொண்டால் காசநோய் ஒழிப்பின் சவால்களை நிச்சயம் சமாளிக்கலாம். 


கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்தே மனித சமூகம் இன்னமும் மீளாத சூழலில் விலங்குகளைத் தாக்கும் காசநோய் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவைப் போன்றே இன்னும் சில கொடிய நோய்கள் பரவக் கூடிய அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. இந்த சூழலில், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் காசநோய் மேலும் உருமாறி அது மனிதர்களுக்கு வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாகவே மருத்துவ துறை விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.