கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டு கோயில் கோயிலாக அலையும் குடும்பம்!

கோடிக்கணக்கிலான சொத்துக்களை விட்டு கோயில் கோயிலாக அலையும் குடும்பம்!

சொந்த வீடு, நிலம், கார் என கோடிக்கணக்கிலான சொத்துக்களை அம்போவென விட்டு விட்டு ஆன்மிகத்தில் இறங்கியுள்ளது ஓர் குடும்பம்.. பொருளை விட அருளே பெரிது என சென்ற இந்த விநோத குடும்பத்தினர் யார்?

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ராதாநகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர்கள் குணசேகரன் - வசுமதி தம்பதியர். இவர்களுக்கு அஜித்குமார், மித்தேஷ் என 2 மகன்கள் இருந்தனர். 

திருச்சியைப் பூர்வீகமாக கொண்ட குணசேகரன் ஆன்லைன் தொழில் செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்தார். செங்கல்பட்டு பகுதியில் சொந்தமாக வீடு கட்டியவர், நிலம் மற்றும் நகை பணம் என அசையும் அசையா சொத்துக்களை நிர்வகித்து வந்தார். 

இந்த நிலையில் குணசேகரனின் மனைவி வசுமதிக்கு வீடு வாசலை காப்பாற்றுவதைக் காட்டலும் ஆன்மிகத்தின் மீது நாட்டம் சென்றிருக்கிறது. வீட்டில் இருந்தவாறே பிறருக்கு ஹீலிங் செய்து வந்தவர் பின்னர் முழு நேர ஆன்மிகத்தில் இறங்கியதோடு, கணவன், பிள்ளைகளையும் தன் வழிக்கு கொண்டு வந்தார். 

இதையடுத்து கடந்த 7-ம் தேதியன்று வீட்டின் எந்த அறையையும் பூட்டாமல் அப்படியே திறந்தவாறே விட்டுச் சென்ற குணசேகரன் - வசுமதி தம்பதியர், இரவோடு இரவாக மாயமாயினர்.  

இரண்டு நாட்களாக வீடு திறந்தே காணப்பட்டதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து நேரில் சென்ற போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. 

அந்த டைரியில் எங்களுக்கு இனி வீடு, வாசல், ஆசை பாசம் என எதுவும் வேண்டாம், இதுவரை உள்ள சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு செல்கிறோம் என எழுதப்பட்டிருந்தது. மேலும் இதற்கு மேல் நான்கு பேரும் கோயில் கோயிலாக சென்று அருள் வாக்கு சொல்லி, கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை உண்டு மீதி வாழ்க்கையை கழித்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. 

பொதுவாக பணத்தை விட பாசமே பெரிது என கூறிக் கொண்டாலும், இங்கு பணம் இல்லாத இடத்தில் பாசம் நிச்சயம் கிடைப்பதில்லை என்பதே நிதர்சன உண்மையாகும். ஆனால் இந்த குடும்பமோ சேர்த்து வைத்த சொத்துக்களையே அம்போவென விட்டு விட்டு ஆன்மிகத்தில் இறங்கியதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!