பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பறிமுதல்?

பொன்முடி வீட்டில் ரூ.70 லட்சம் பறிமுதல்?

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை நடத்தி  வரும் சோதனையில் 70  லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006 - 11-ம் ஆண்டு கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதா என அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

சென்னையில்  எழும்பூர், பெசண்ட் நகர் உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம்  சண்முகபுரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் அமைச்சரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உட்பட அமைச்சருக்கு தொடர்புள்ளவர்கள் வீட்டில் ஐடி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையை துணை ராணுவத்தினர் உதவியுடன் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : விடைக்கிடைக்காத ராமஜெயம் வழக்கு...விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

இதன்ஒரு பகுதியாக அமைச்சர் பொன்முடியின் காரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், ஆவணமாக டைரி ஒன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தொடர்ந்து, தொழில்நுட்ப ரீதியாக லேப்டாப், செல்போன், ஹார்ட் டிஸ்க், பெண் டிரைவ் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களில் வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு, திமுக தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் 70  லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாகவும், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.