காசநோய் தடுப்பூசி கண்டுபிடித்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு

  காசநோயில் இருந்து பாதுகாக்க குழந்தை பிறந்தவுடன் போடப்படும் முதல் தடுப்பூசி யான பிசிஜி முதல் டோஸ் தயாரிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

காசநோய் தடுப்பூசி கண்டுபிடித்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு

பிசிஜி (Bacille Calmette-Guérin) தடுப்பூசி காசநோயைத் தடுக்கவும், மூளைக் காய்ச்சலைத் தடுக்கவும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பிறந்தவுடன் அளிக்கப்படும் முதல் தடுப்பூசி, மனித செல்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பாற்றலை அளிக்கிறது.

பிசிஜி தடுப்பூசியைப் பொறுத்தவரை நீண்ட கால நோக்கில் வழங்கப்படும் ஒரு தடுப்பூசி. இந்த தடுப்பூசியில் மட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிரிகள் உடலில் செலுத்தப்படுகிறது. உடலில் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு சக்தி இரு விதங்களில் ஏற்படுகிறது. ஒன்று humoral எதிர்ப்பு சக்தி,  மற்றொன்று டி - செல்கள் மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி. இந்த பிசிஜி தடுப்பு மருந்து உள்ளே செலுத்தப்பட்டவுடன் டி - செல்கள் மூலமான எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனை நோய் எதிர்ப்பு செல்கள் நினைவில் கொள்ளும். மீண்டும் அதே போன்ற கிருமிகள் உடலில் நுழைய முயன்றால், அந்த நினைவகம் தூண்டப்பட்டு பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, உடலைப் பாதுகாக்கும்.

உலகில் உள்ள காசநோயாளிகளில் 3-ல் ஒரு பங்குக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பிசிஜி தடுப்பு மருந்தானது காசநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியாவில் குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுவிடுகிறது.

கொரோனாவை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பிசிஜி தடுப்பு மருந்தை அளித்துப் பரிசோதிக்க ஐசிஎம்ஆர் முடிவுசெய்து வழங்கியது. கொரோனா தாக்கியவுடன் வீக்கத்துடன் கூடிய நோய் எதிர்ப்புசக்தி உருவாவதன் மூலம் நோயாளிகளின் நிலை மோசமடைகிறது. ரத்தத்தில் உள்ள மோனோசைட்கள்தான் (ரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை) சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. இந்த சைட்டோகைன்களில் ஐஎல் 1, ஐஎல் 6, டிஎன் ஆல்ஃபா போன்ற வகைகள் உண்டு. கோவிட் - 19 தாக்கும்போது இவை ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, நுரையீரலுக்கு ரத்தம் செல்வதை குறைத்து நிலைமையைச் சிக்கலாக்குகின்றன. ஆகவே, இதனை தடுக்க பிசிஜி தடுப்பு மருந்தை வழங்கியதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். 

1899ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சென்னை மாகான சுகாதார ஆணையராக இருந்த W.G.king என்பவர் இறந்தவுடன் அவரது நினைவாக இந்த ஆய்வகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த ஆய்வகத்தில் 1921ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிசிஜி தடுப்பூசியின் முதல் டோஸ் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 2015 - 16ம் ஆண்டு முதல் 2020 - 21(அக்டோபர்) வரை 4ஆண்டுகள் தடுப்பூசி உற்பத்தி நடைபெறவில்லை. 2017 - 18 ஆண்டு 6லட்சம் பிசிஜி தடுப்பூசியும், 2020 - 21(அக்டோபர்) வரை 24 லட்சம் தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2003 - 2004 ம் ஆண்டு அதிகபட்சமாக 923.17 லட்சம் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 2012 - 13ம் ஆண்டு 12.57 லட்சம் தடுப்பூசி மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஐசிஎம்ஆர் - ன் டிபி ஆய்வு நிறுவனமும் சென்னையில் தான் உள்ளது. மேலும் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தின் முக்கிய பணியே பிசிஜி தடுப்பூசி தயாரிப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.