நிர்வாகிகள், MLA க்களோடு அதிமுக தலைமைக் கழகத்துக்கு வரப்போகும் சசிகலா!! அதிர்ச்சியில் எடப்பாடி

நிர்வாகிகள், MLA க்களோடு அதிமுக தலைமைக் கழகத்துக்கு வரப்போகும் சசிகலா!! அதிர்ச்சியில் எடப்பாடி

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சசிகலா ஒதுங்கிவிட்டதால் இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மோதல் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ஆடியோக்கள் மூலம் தன் அரசியல் வருகையை அறிவித்திருக்கிறார் சசிகலா.

அந்த ஆடியோக்களில் தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா, அதன் பின் முன்னாள் எம்.எல்.ஏவிடமும் பேசினார். மேலும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த தகவல் எடப்பாடியை சென்றடைந்ததும் கொதிப்படைந்த எடப்பாடி கே.பி.முனுசாமி மூலம் சசிகலாவுக்கு பதிலடி கொடுக்கச்சொல்லியுள்ளார். அதன் படி முனுசாமியும் "சசிகலாவை எந்த அதிமுக தொண்டனும் ஆதரிக்க மாட்டான். அவர் அமமுகவினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்" என்று கூறியுள்ளார். மேலும் சி.வி.சண்முகமும் தன் பங்குக்கு சசிகலாவை விமர்சித்தார். 

இப்படி எடப்பாடி சசிகலாவுக்கு எதிரான நிலையை எடுக்க, பன்னீர் செல்வமோ சசிகலாவுக்கு ஆதரவான நிலையை எடுத்து வருகிறார். தனி ஆளாக எடப்பாடியை சமாளிக்க தன்னால் முடியாது என்பதை உணர்ந்த அவர் சசிகலா கட்சிக்குள் வந்தால் நல்லது தான் என்று செயல்பட்டு வருகிறார். இப்படி பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் இருப்பதால் தான் சசிகலாவிடம் ஆடியோவில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்சியிலிருந்து நீக்கவோ எடப்பாடியால் முடியவில்லை. 

ஆனாலும் கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை சசிகலா இன்று தான் சந்தித்தோம். அவர் இல்லாமலே உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு இணையாக இடங்களை பிடித்திருக்கிறோம். ஆகவே அவர் தயவு நமக்கு தேவையில்லை. ஒருவேளை சசிகலாவை கட்சியில் சேர்த்தால் கூட அவர் நமக்கு கீழ் இருக்கமாட்டார். அவர் வந்தால் யாரும் சுதந்திரமாக செயல்பட ,முடியாது. ஆகவே அவரை சேர்க்க கூடாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறார். 

ஆனால் சசிகலாவோ நான் இல்லாமல் அவர்கள் மூன்று தேர்தலை சந்தித்து விட்டார்கள். அனைத்திலுமே அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளார்கள். எனவே அதிமுகவிற்கு நான் தேவை. அதை அவர்களும் புரிந்துகொள்வார்கள் என தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். அதோடு சசிகலா இதுவரை 2000 பேரிடம் பேசியதாகவும் அதில் அதிமுக மூத்த நிர்வாகிகளும்,சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என அவரது தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். 

மேலும் கொரோனா முடிந்ததும் தனது ஆதரவு நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களோடு அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்ல சசிகலா முடிவெடுத்திருப்பதாகவும், எடப்பாடி தரப்பினர் இதை தடுத்தால் இதை மையமாக வைத்தே அதிமுகவை கைப்பற்ற முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ எடப்பாடி- சசிகலா இடையே நடக்கும் மோதல் இன்னும் சில நாட்களின் பட்டவர்த்தமாக வெளிப்படும் என்று கூறுகிறார்கள் விஷயமறிந்தவர்கள்.