கவர் ஸ்டோரி

#Exclusive | சினிமாவிற்கு அகராதியாக விளங்கும் கலைக்களஞ்சியம் கமல்...

Malaimurasu Seithigal TV

1895களில் ஆரம்பித்த சினிமா, இரண்டு நூற்றாண்டுகளாக பல வகையான மாற்றங்களைக் கண்டு மேம்பட்டு நிற்கிறது. பல ஜாம்பவான்கள் சினிமாவிற்கு புதுமை கொண்டு வந்து, பார்வையாளர்களை வியக்க வைத்து வருகிறது. 1918இல் அன்றைய மதராசப்பட்டினத்தில் சினிமாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அது வரை மேடைகளில் நாடகங்களும், தெருக்கூத்துகளும் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில், தமிழ் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் அளவில் வெள்ளை திரையில் காட்சியமைப்புகள் வந்து, அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது.

தற்போது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை வயது வரம்பின்றி, இன வேறுபாடு இன்றி, ஜாதி மதம் என அனைத்தையும் அழித்து ஒரே இடத்தில் அமர வைத்த ஒன்றாக சினிமா இருந்து வருகிறது.

சினிமாவில் வளர்ந்த குழந்தை :

அந்த சினிமாவில் 5 வயது குழந்தையாக நுழைந்து, ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என தனது அப்பாவி முகத்தை வைத்தும் அபரிதமான வசன வீச்சை வைத்தும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார் நடிகர் கமலஹாசன்.

பருவமடைந்த யேசு :

பின், தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். பின், அழகிய இளைஞனான பிறகு, யேசுவாக அன்னை வேளங்கன்னி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடித்தார். பின் கதாநாயகனாக களம் இறங்கி, காலிவுட்டையே கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, கமலுக்கு, சினிமா மீதான ஆர்வம் பெருகி, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை எழுதுவது, வசனம் எழுதுவது, பாடல், ஆடல் என அனைத்து வகையான கலைகளிலும் தனது கால் தடத்தை பதித்து, அடுத்த தலைமுறை சினிமா பிரியர்களுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்க துவங்கினார்.

உலக சினிமாக்களில் வந்த புது புது கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் முதன்முறையாக தமிழ் சினிமா மூலம் இந்திய சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலையே சேரும். அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஒரு சில சினிமா தொழில்நுட்பங்களைப் பார்க்கலாம்.

உலகளாவிய தரத்திற்கு தமிழ் சினிமாவைக் கொண்டு போன கமலஹாசன், அதிநவீன தொழில்நுட்பங்களை உலக சினிமாக்களில் இருந்து கொண்டு வரும் கருவியாகவே இருந்திருக்கிறார்.

வென்ட்ரிலோக்விசம் :

1977 இல் அவர்கள் என்ற படத்தில், வென்ட்ரிலோக்விசம் என்ற ஒரு புதிய வகை கலையை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இது, வாயை மூடிக் கொண்டே பேசுவது பாடுவது போன்ற செயல்களை செய்து, அதனை மேலும் ஆர்வமூட்டும் வகையில் உருவாக்க, பொம்மைகளுக்குக் குரல் கொடுக்கும் திறன் தான் வென்ட்ரிலோக்விசம்.

பாலிவுட்டில் ஒரு கோலிவுட் :

1981 இல் ஏக் துஜே கேலியே என்ற வெள்ளி விழா கொண்டாடிய ஹிந்தி படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் தென்னிந்திய நட்சத்திரம் இவர் தான். அதுவும் தமிழிலேயே பேசி, தமிழ் நடிகர்களையே வைத்து நடித்தார். அது வரை, ஹிந்தி நடிகர்களே, குடுமி வைத்துக் கொண்டு தவறான வார்த்தைகளில் இந்தி பேசுவது போன்ற கதாபாத்திரங்களாகவே தமிழர்களை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சீக்வல் :

படம் ஒன்று உருவாக்கிய பின், புதிய கதைகளைத் தேடும் தமிழ் சினிமாக்களில் முதன் முறையாக 1979இல் வெளியான கல்யாண ராமன் படத்தின் தொடர்ச்சி கதையாக 1985இல் ஜப்பானில் கல்யாண ராமன் என்ற படம் உருவாக்கினார்.

லைவ் ரெக்கார்டிங் :

லைவ் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்த காலம் போக, 1986இல் கம்பியூட்டரிலேயே பாடல்களை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். இதில், இசை ஜாம்பவான் இளையராஜா தான் முதன் முதலில் தனது பாடல்களை ரெக்கார்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டண்டு மேன்களுக்காக ஷுகர் கிளாஸ் :

ஸ்டண்டுகள் என்றாலே எத்தனை எலும்புகள் உடையும், எத்தனை கண்ணாடிகள் கிழிக்கும் என்ற பயத்தில் இருந்த தம்ழி சினிமா ஸ்டண்டு மேன்களுக்கு உதவும் வகையில், அனைத்து கண்ணாடிகளாஇயும், Sugar Glass ஆக மாற்றினார். இதனால் பயமே இல்லாமல், பல வகையான சிறப்பு சண்டை காட்சிகள் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் வெளியாகின.

பேசும்படங்களுக்கு இடையே மௌனம் :

சத்தங்கள் தான் படத்தின் முக்கிய அங்கமே. அந்த சத்தங்கள் வந்த பிறகும், சத்தமில்லா ஊமை படத்தை தமிழ் சினிமாவில் மீண்டும் உருவாக்கி, 1987 இல் பேசும் படம் என்ற படத்தை மக்களுக்கு கொடுத்தார் கமல்.

அனைவரும் ஹீரோ தான் :

ஊணத்தை அருவருப்பாகப் பார்த்த நேரம், 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள மனிதனாக டூப் இன்றி தானே நடித்தார். முட்டிகளிலேயே முழு படத்தையும் நடித்த பெருமை இவரையே சேரும். மேலும், மூன்று மற்ற குள்ள மனிதர்களையும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார் கமல்.

அழிக்கவே உறுவான செட் :

செட்டு போட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது வழக்கம். ஆனால், ஹாலிவுட் படங்களில் வருவது போல, தகர்த்து எரியவே, 1990இல் வெளியான மைக்கல் மதன காமராஜன் படத்தின் கிளைமேக்ஸ் சீனுக்காக மலையின் உச்சியில் தொங்க ஒரு வீடு செட்டைப் போட்டார். மேலும், அதனை அழகாக படம் பிடிக்க, ஒரு ஹைட்ராலிக் செட்டைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சினிமாவுக்குள் மாயாஜாலம் :

முதன் முறையாக ஒரு கம்பியூட்டர் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி திரைக்கதை எழுதிய படம் 1992இல் வெளியான தேவர் மகன் படம். இதற்காக மூவி மேஜிக் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி இருக்கிறார் கமல்.

இது வரை கண்டிராத அற்புதம் :

1994இல் வெளியான மகாநதி படத்தை AVID என்ற சாட்வேர் மூலமாக எடிட் செய்யப்பட்டது. மேலும், முதன் முரையாக டோல்பீ ஸ்டிரியோ சரௌண்ட் எஸ் ஆர் (Dolby Stereo Surround SR) தொழில்நுட்பத்தை 1995இல் வெளியான குருதிபுனல் படத்தில் பயன்படுத்தி, சிறப்பான சர்ரியல் (Surreal) சத்தத்தை இந்திய சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆறிலிருந்து அறுபது வரை : 

1996இல் வெளியான இந்தியன் படத்தில் மிக தத்ரூபமாக 80 வயது கிழவனாக நடித்த கமல், தனக்கும், தனது மனைவியாக நடித்த சுகன்யாவிற்கும் ப்ராஸ்தெடிக் மேக்கப்பை பயன்படுத்தினார்.

நிஜ சப்தத்தின் அழகு :

பல வகையான புதுமைகளை முயற்சி செய்யும் கமல், 2000த்தில் வெளியான ஹே ராம் படத்திற்காக தனியாக டப்பிங் போகாமல், லைவ் ரெக்கார்டிங், அதாவது படத்தை எடுக்கும் போதே அதன் வசனத்தையும் ரெக்கார்ட் செய்யும் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், படம் எடுக்கும் போது, ஜெனரேட்டர், ஃபான் (மின் விசிறி) மட்டுமல்ல, நடக்கும் போது செருப்பு சத்தம் கூட வரக்கூடாது என்று படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் ஃப்ரிக்ஷன் ஃப்ரீ (friction free) செருப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் கமல்.

இதில் குறிப்பிட வேண்டியது, ஷாருக்கான், தமிழ், ஹிந்தி, ஆகிய இரண்டு மொழிகளிலும், சொந்த குறலிலேயே லைவ் ரெக்கார்டிங்கில் நடித்திருக்கிறார். மூன்று மணி நேரம் படம், லைவ் ரேக்கார்டிங்க், அதுவும் 200 க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் நிறைந்த குழுவை வைத்து எடுத்த கமலின் தைரியத்தைப் பாராட்டி, ஒட்டு மொத்த சினிமாவும் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவு இருந்தது இந்த படம்.

சினிமாவை ஆளவந்தான் : 

என்றும் புரியாத படங்களை எடுப்பவர் என பெயரை வாங்கிய முதல் படம் ஆளவந்தான் தான். 2001இல் வெளியான இந்த படத்தில் மனோவியாதியை முக்கிய கதைகளமாக வைத்திருந்தார். மேலும்m, மோஷன் ஃப்ரீஸ் தொழில்நுட்பம் வைத்து, ஒரு ஒரு ஃப்ரேமையும் வரைந்து 2டி முறையில், அனிமேஷன் செய்யப்பட்ட காட்சியமைப்புகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டது.

அது மட்டுமின்றி, சண்டை காட்சிகளுக்காக, ஏர் ராம்ப் தொழில்நுட்பம் இந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக சினிமாக்களிலேயே மனிதர்கள் நடித்து வெளியான படத்தில் 2டி அனிமேட்டட் ஸ்டண்டு காட்சிகளை வைத்த படம் என்ற பெருமை ஆளவந்தானையே சேரும்.

கதாபாத்திரமாக மாறிய இயக்குனர் : 

நடிகர்கள் பொதுவாக கண்ணாடி போட்டு நடிக்க நேரிட்டால், அதற்கு வெறும் ஃப்ரேம் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், உண்மையான சோடாபுட்டி போட்டு, படம் முழுவதும் உண்மையான பார்வைக் கோளாரு கொண்டவராகவே நடித்து வெளியான படம் தான் 2003இல் வந்த அன்பே சிவம்.

டிஜிட்டலை வரவேற்ற ஜாம்பவான் :

ரீல்களை ஓட்டிக் கொண்டிருந்த இந்திய சினிமாக்களில் டிஜிட்டல் கேமராக்கள் முழு வீச்சில் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படம் முழுவதுமாக டிஜிட்டல் கேமராவிலேயே எடுக்கப்பட்டது.

அவதாரங்களின் தலைவன் :

உலக சினிமாவில் எந்த பெரிய நடிகரும் இது வரை செய்திடாத ஒன்றாக, ஒரே படத்தில் 10 வித கதாபாத்திரங்களில் நடித்து கமலஹாசன், தசாவதாரம் என்ற படம் மூலம், சரித்திரம் படைத்தார்.

மேலும், 2008ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் சைவம் வைணவத்திற்கு இடையிலான தகராறு பற்றி பேசியதோடு, உலகையே அழிக்க வந்த எபோலா வைரஸ் கிருமி பற்றியும் உலக சினிமாக்களில் முதன்முறையாக தெளிவாக பேசிய படமாகவும் தசாவதாரம் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ரிவர்ஸ் கிங் கமல் :

அனைத்திலும் குறிப்பிட வேண்டிய ஒன்று, 2010இல் வெளியான மன் மதன் அம்பு படத்தின் நீல வானம் பாடல் தான். ஒரு பாடலை தலைகீழாக படம் பிடித்து, சரியான முறையில் லிப் சிங்க் செய்து எடுக்கப்பட்ட பாடல் தான் இது.

விடாமுயற்சியின் வெற்றி :

பல விதமான சர்ச்சைகளில் சிக்கியும், வெற்றி வாகை சூடிய 2013இல் வெளியான விஸ்வரூபம் தான் ஆரோ 3D 7.1 சௌண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் இந்திய மற்றும், இரண்டாவது உலக சினிமா ஆகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படம், “ரெட் டெயில்ஸ்” என்ற ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2011ம் ஆண்டு வெளியானது.

சினிமாவை வெறும் கலையாக மட்டும் பார்க்காமல், தனது உயிராக பார்த்த கமல், தன்னால் முடிந்த அளவில் அனைத்து வகையான எக்ஸ்பெரிமெண்டெல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, தமிழ் சினிமாவை, ஏன், இந்திய சினிமாவையே உலகளவில் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்.

மூன்று முறை இவரது படங்கள் உலக சினிமாக்களின் மிகச் சிறந்த விருது விழாவான ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் பெருமைக்குறிய ஒன்று. இவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், தேசிய விருது, கலைமாமணி மற்றும் டாக்டர் பட்டமும் கொடுத்துள்ளது.

இப்படி, சினிமா பிரியர்களுக்கு புது புது தொழில்நுட்பங்களுடன், தைரியமான பல கதைகளை என்றும் கொண்டாடும் வகையில் எதிர்நோக்குப் பார்வை கொண்ட கமல் கொடுத்துள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.