நடந்தது நகர சபையா? அல்லது திமுகவின் நாடக சபையா? மநீம அறிக்கை!

நடந்தது நகர சபையா? அல்லது  திமுகவின் நாடக சபையா? மநீம அறிக்கை!

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் நடந்த கூட்டம் நகர சபையா? அல்லது நாடக சபையா? என மநீம கட்சி கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்:

கிராம சபை கூட்டமானது, ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தனமையையும் , பொறுப்புணர்வையும் ஊக்குவிப்பதற்காகவும், பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காகவும், கிராம வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல் உள்ளிட்டவை தான் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும், இந்த கூட்டமானது 1996 ல் இருந்து நடைபெற்று வருகிறது. ஆனால், கிராம சபை கூட்டங்களுக்கு இணையான கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் நடத்தப்படவில்லை என்பதே உண்மை.

இதையும் படிக்க: கோவில் நிலங்கள் புறம்போக்கு நிலமா? - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி!

2010ல் வந்த சட்டத்திருத்தம்:

இதனை சரிசெய்யும் விதமாக நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று 2010ல் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் எண் 35ன் கீழ் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தவில்லை:

இந்த சட்டத்திருத்தமானது, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறை படுத்தவில்லை. அதைத்தொடர்ந்து, 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியிலும் இந்த சட்டத்திருத்தம் செயல்படுத்தபடவில்லை.

மநீம கட்சியின் தொடர் வலியுறுத்தல்:

ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தலைமையில் தொடங்கப்பட்ட மநீம கட்சி முதலில் இருந்தே இந்த சட்டத்திருத்ததை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து, சட்டதிருத்ததிற்கான மாதிரி “ஏரியா சபை” கூட்டமானது மநீம கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தலைமைச் செயலாளரையும், தமிழகமெங்கும் உள்ள ஆட்சியர்களையும் சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினார். 

இதையும் படிக்க: மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்...வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?

அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு:

அதன்படி, கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில், ஒரு வார்டானது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் “பகுதி சபை” கூட்டங்கள் நடத்தப்படும்; வார்டு அளவில் “வார்டு கமிட்டி”க் கூட்டங்கள் நடைபெறும் என்று விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் முதன் முறையாக நடைபெறவுள்ள பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் கடந்த நவம்பர்  1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. 

கண்டனம் தெரிவித்த மநீம கட்சி:

இந்த அறிவிப்பையடுத்து, மநீம கட்சி இதனை வரவேற்பதாகவும், இந்த கூட்டங்கள் அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை நம்புவதாகவும் அறிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்தக் கூட்டங்களில் நடந்தது என்ன? என்று மநீம கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 நகரசபையா? அல்லது திமுகவின் நாடகசபையா? :

அதாவது, தமிழக அரசு அறிவித்த பகுதி சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் தலைநகரான சென்னையில் நடைபெறவில்லை, சென்னையை தவிர்த்து நடத்தப்பட்ட பிற மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் திமுகவின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களையெல்லாம் வார்டு கவுன்சிலர் தான் தலைமையேற்று நடத்தவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற கூட்டங்களில் இந்த விதிமுறையானது காற்றில் பறக்கவிடப்பட்டு, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல். ஏக்கள் தலைமையில் “குறைதீர் கூட்டங்கள்” போலவே நடைபெற்றுள்ளது.

அதற்கு சான்றாக, தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, எம்.பி.T.R.பாலு அவர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பள்ளி மாணவரால் திமுக தலைவரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். அதேபோல் பெரும்பாலான இடங்களில் நிதிநிலை அறிக்கை கூட வாசிக்கப்பட வில்லை, தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை. இது தான் தமிழக அரசு அறிவித்த நகரசபை கூட்டமா? என்று கேள்வி எழுப்பியதோடு, இது நகரசபையா? அல்லது திமுகவின் நாடகசபையா?  என்று மநீம கட்சியின் சார்பில் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.