தாய் – மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கந்துவட்டிக்காரன்...

திண்டுக்கல் மாவட்டத்தில் வாங்கிய கடனை திரும்ப தரவில்லை என்பதற்காக தாய் – மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தாய் – மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கந்துவட்டிக்காரன்...
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் : நத்தம் சாத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன். 52 வயதான இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தில் வறுமை சூழ்ந்ததையடுத்து அதே பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரிடம் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். 

அதிக வட்டிக்கு கொடுக்கும் ராஜேஷ், பணத்தை திருப்பித் தரவில்லையென்றால் விவகாரமாக ஏதேனும் செய்வார் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தாலும், வேறு வழியில்லாமல் கடன் வாங்கியிருந்தார்.  மாதாமாதம் முறையாக வட்டித் தொகையை செலுத்தியதுடன், 70 ஆயிரம் வரை அசல் தொகையையும் கொடுத்து கழித்துள்ளார். இதன் பின்னர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் மனைவி சுமதி, மகன் ஜோதிமணியை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள ஒத்தக்கடைக்கு சென்று தலைமறைவாகி விட்டார் ராமன். 

இந்நிலையில் ராமனின் மனைவி சுமதியும், மகன் ஜோதிமணியும் சாத்தாம்பட்டியில் காதணி விழாவுக்காக வந்திருப்பதை ராஜேஷின் தாய் சாந்தி கண்டு கொண்டார்.  உடனடியாக மகனுக்கு போன் செய்து, நம்மிடம் பணம் வாங்கி நமக்கு காது குத்தியவர்கள், இப்போது காது குத்து விழாவுக்கு வந்துள்ளனர் என கூறினார் சாந்தி. 

இதையடுத்து விழா நடந்த இடத்துக்கு கோபத்துடன் வந்த ராஜேஷ், ஜோதிமணியை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். மேலும் கடன் கொடுத்தவர் ஊருக்குள் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கடன் வாங்கியவர் வேறு சமூகம் என்பதால் அங்கு சாதிரீதியான பேச்சுக்களும் எழுந்திருக்கிறது. 

வட்டிக்கு பணம் வாங்கி விட்டு திருப்பித் தராமல் தப்பித்து ஓடி விட்டீர்களே.. உங்களுக்கு வெட்கமாய் இல்லையா என பேசியதோடு, ஜோதிமணியை அடித்து அங்குள்ள புளியமரத்தில் கட்டினார். தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்ட தாய் சுமதியையும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்தனர். 

ஊர் மந்தையில் வைத்து உருட்டுக்கட்டையை எடுத்து ஜோதிமணியை சரமாரியாக அடித்து வெளுத்த ராஜேஷ் இந்த சம்பவத்தை போனில் வீடியோ எடுத்ததைப் பார்த்து அதை அழிக்குமாறும்  மிரட்டியிருக்கிறார்.  தன் மனைவி, மகனை கட்டி வைத்து அடித்த செய்தியைக் கேட்டு பதறிப் போன ராமன், இரவோடு இரவாக சாத்தம்பட்டியை அடைந்தார். வாங்கிய கடனை ஒரு சில நாட்களில் தந்து விடுவதாக உறுதியளித்ததையடுத்து சுமதி, ஜோதிமணி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். 

அடி தந்த வலியும், அவமானம் தந்த வலியும் ராமனின் குடும்பத்தை நிலைகுலையச் செய்ததையடுத்து திண்டுக்கல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கந்துவட்டி கொடுமை செய்ததாக ராமன் புகார் அளித்த செய்தி ராஜேஷின் காதுகளுக்கு எட்டியதையடுத்து தன் தாய் தந்தையுடன் வேறு ஊருக்கு தப்பிச் சென்று விட்டார். 

ஊருக்குள் பல வருடங்களாகவே இதே போல பணம் கொடுத்து, அதிகப்படியான வட்டித் தொகையை வசூலித்ததோடு, பணத்தை திருப்பித் தரவில்லையென்றால் மரத்தில் கட்டி வைத்து அடிப்பது என இப்படியான ரவுடித்தனத்தை செய்து வந்திருக்கிறது இந்த குடும்பம்.  வாங்கிய கடனை திருப்பி கொடுக்காதது தவறு என்றாலும், அதற்காக ஊருக்கு மத்தியில் கட்டி வைத்து அடிப்பது நியாயமாகுமா? அடி தந்த வலி ஆறும்.. அவமானம் தந்த வலி ஆறுமா? 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com