சென்னை பெருநகர் பகுதியில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் தரும் வகையில், மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ., கடற்கரைப் பகுதி ரூ.100 கோடியில் சுற்றுலா ரீதியாக மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
பொதுப்பணித்துறை, மாநகராட்சி, சுற்றுலாத் துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்கேற்புடன், இதற்காக தனி நிறுவனம் ஏற்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கலந்தாலோசகர் தேர்வு உள்ளிட்ட பணிகளையும் CMDA மேற்கொண்டது.
மேலும் படிக்க | 2000 ஏழை குழந்தைகளின் தீபாவளிக்கு விளக்கேற்றிய ‘முஸ்கான்’...
கடற்கரை மேம்பாட்டுத் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், நேரடியாக கண்காணித்து வரும் சூழலில், கடற்கரை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சில மாதிரி வடிவமைப்புகளையும், திட்டத்துக்கான அடிப்படைக் கூறுகளையும் CMDA இறுதி செய்துள்ளது.
மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரையை மேம்படுத்தும் திட்டம், தனி நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக, கடற்கரையில் சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் வகையில், என்னென்ன வசதிகள் செய்யலாம் என்பதற்கான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதன்படி 30 கி.மீ., கடற்கரை ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு தலைப்பில் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் CMDA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மெரினா முதல் கோவளம் வரை என்று உருவாக்கப்பட்ட திட்டத்தை, எண்ணுார் கழிமுகப் பகுதி வரை, 51 கி.மீ., தொலைவுக்கு விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன்படி, எண்ணுாரில் இருந்து மெரினா வரையிலான பகுதி, சூழலியல் ரீதியாக பாதுகாப்பதற்கான இடமாக மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி...
மேலும், மெரினா முதல் சாந்தோம் வரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளதாகவும், பெசன்ட் நகர் முதல் திருவான்மியூர் வரை உடல்நலன், வாழ்வியல் சார்ந்த வசதிகள் இடம்பெற உள்ளதாகவும், நீலாங்கரை முதல் ஆலிவ் கடற்கரை வரை சுற்றுச்சூழல் சார்ந்த வசதிகள் இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அக்கரை முதல் உத்தண்டி வரை கலாச்சார வசதிகளும், முட்டுக்காடு முதல் கோவளம் வரை நீர் விளையாட்டு வசதிகளும் இடம்பெற உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் கிடைத்தவுடன், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் CMDA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.