சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல குற்ற சம்பவங்களும் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை ரங்கநாதன் தெரு முழுவதும் காவல்துறையினருடன் நடந்து சென்று பாரவையிட்டு, இது குறித்து மற்ற அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தியாகராய நகர் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தியாகராய நகரில் 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் முறையாக தியாகராய நகரில் 6 FRC கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை பில்டர் செய்து ஏற்கனவே குற்றங்கள் அவர்கள் மீது உள்ளதா என்பது குறித்து கண்டறியவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் மூன்று இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே தியாகராய நகர் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தியாகராய நகர் பகுதி சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் குறையும் எனவும் தெரிவித்தார்.இதில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இணை ஆணையர் நரேந்திரன் நாயர் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்