
கரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுமியா என்கிற சபரி. இவரது பெற்றோர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே ஆடம்பர வாழ்க்கையில் அதீத நாட்டம் கொண்ட சவுமியா மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அவரது நடவடிக்கையை பிடிக்காமல் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி ராமநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு ராஜேஷ் காவலருடன் பழக்கம் திருமணம் செய்துக் கொண்டார். அவர் மூலம் தனது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்ட சவுமியா தனக்கு கணவர் மூலம் மேலிடத்தில் நல்ல பழக்கம் உள்ளது என்று கூறி மோசடி செயல்களில் ஈடுபட தொடங்கினார்.
பலபேரிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். மேலும் தனது கணவரின் பணத்தை சுருட்டிக் கொண்டு அவரை கை கழுவினார். இதனிடையே மோசடி புகாரில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு ஒரு சில மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்திய சவுமியா அவரை கழற்றி விட்டார்.
அதன்பின்னர் சவுமியா கரூர் காந்தி கிராமம் பகுதியில் குடியேறினார். அங்கும் தனது கைவரிசையை காட்டத்தொடங்கிய அவர் உச்சகட்டமாக தான் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிவதாகவும், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறி பலரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சவுமியாவை திருமணம் செய்து கொடுக்க ஏற்பட்டு செய்தார். இதனையடுத்து தனக்கு அமைச்சரை நன்கு தெரியும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கி தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதனை நம்பி சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் பணத்தை சவுமியாவிடம் முன்பணமாக கொடுத்துள்ளனர். மேலும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதாக முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே சவுமியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவர் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் கூறிய அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்திக்கும் போது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியா தங்கி இருக்கும் வீட்டின் உள்ளே சென்று அவரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல ஆண்களை திருமணம் செய்து கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய சவுமியா வருகின்ற ஞாயிற்று கிழமை சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கோவையை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் திருமணம் செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.