தட்டிக்கேட்டதால் தாக்கிய கொடூரம்... ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி...

நடுத்தெருவில் பட்டாசு வெடித்ததைத் தட்டிக் கேட்டவரி, 10 பேர் தாக்கியுள்ளனர்.இதனால், படுகாயமடைந்தவர், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்டிக்கேட்டதால் தாக்கிய கொடூரம்... ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி...
Published on
Updated on
2 min read

சென்னை : வில்லிவாக்கம் மண்ணடி ஒத்தவடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாசபுத்திரன் (56). இவரது மகன் தீபன் ராஜ் (37) நாய்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தீபன் ராஜ் நேற்று நள்ளிரவு தனது வீட்டருகே நடுத்தெருவில் கல் வைத்து அதில் பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த அதே பகுதியில் வசிக்கும் ஐ.சி.எஃப் தொழில்நுட்பவியலாளரும், தி.மு.க 95வது வட்டச் செயலாளர் அகிலன் என்பவரது கார் ஓட்டுனர் பாலாஜி, தீபன் ராஜை பார்த்து, “ஏன் இவ்வாறு நடுத்தெருவில் பட்டாசு வெடிக்கிறீர்கள்?” எனக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர் பாலாஜி தனது முதலாளியான திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அகிலனுக்கு செல்போனின் தொடர்புகொண்டு அழைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அகிலன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் தீபன் ராஜை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் தீபன் ராஜுக்கு இடது பக்க காது, இடது பக்க கால் பாதம் ஆகிய இடங்களில் பலத்த காயமும், தலையில் உள்காயங்களும் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தீபன் ராஜை அவரது தந்தை தாசபுத்திரன் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தீபன் ராஜ் தந்தை தாசபுத்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக திமுக வட்டச் செயலாளர் அகிலனின் சகோதரர் கடம்பன் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள அகிலன், பாலன், பாலாஜி, ரஞ்சித், சுதாகரன், நவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அகிலன் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com