சதுரங்க வேட்டை பாணியில் அழகிகளை வைத்து பண மோசடி...

சதுரங்கவேட்டை பட பாணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கொடுத்தால் 10 லட்சம் தருவதாக கூறி மர்மகும்பல் ஒன்று மோசடியில் இறங்கியது.
சதுரங்க வேட்டை பாணியில் அழகிகளை வைத்து பண மோசடி...
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு குண்டல் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த ஒரு வார காலமாக கரைவேட்டிக் காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அடிக்கடி வந்து செல்வதும், வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட ஒரு கும்பல் அவர்களை வரவேற்று, ஒவ்வொரு அறைக்கும் அனுப்பி வைப்பதும் என பயங்கர பரபரப்புடன் காணப்பட்டிருந்தது. 

விடுதியில் விபச்சாரம்தான் நடக்கிறதோ என்ற சந்தேகத்தில் கன்னியாகுமரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை நெருங்கினர் போலீசார். விடுதி வரவேற்பறையில் போலீசாரைப் பார்த்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், நாலாபுறமும் தெறித்து ஓட, அவர்களை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்க என சினிமா பாணியிலான காட்சிகள் அரங்கேறின. 

விடுதியை விட்டு தப்பியோடிய அந்த மர்மகும்பல் புதர்கள் சூழ்ந்த காட்டுக்குள் ஓடியதையடுத்து போலீசார், அவர்களை டார்ச் லைட் அடித்து தேடிப் பார்த்தனர். அப்போது 2 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கொக்கி போட்டு தூக்கியதையடுத்து அவர்களிடம் இருந்து பேக் ஒன்று கையகப்படுத்தப்பட்டது. அந்த பையில் இருந்து சுமார் 11 லட்சம் ரூபாய் வரை பணம், 13 செல்போன்கள், கைரேகை பதிவு செய்யக்கூடிய உபகரணங்கள், தி.மு.க. கொடி பொருத்தப்பட்ட 3 சொகுசு கார்கள் ஆகியவற்றை கைப்பற்றினர் போலீசார். 

விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த கும்பல் என தெரியவந்தது.  மதுரை திருமங்கலத்தையடுத்த பேரையூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர், சதுரங்கவேட்டை பட பாணியில் ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். அதாவது, தனியார் நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மூன்றே மாதங்களில் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாய் வரை நிச்சயம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்துள்ளனர். 

இதை நம்பிய கன்னியாகுமரி வி.ஐ.பி.க்கள் பலரும், லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர். அவ்வாறு வருபவர்களை கவரும் விதமாக, விடுதிக்கு வரவழைத்து, தனித்தனியே உள்ள அறைக்குள் அனுப்பி அவர்களுடன் வடமாநில பெண்களை நயமாக பேசச் செய்து பணத்தை பெற்றிருக்கின்றனர். 

மாலை 4 மணி வரை வசூல் ஆகும் பணத்தை உடனடியாக மதுரைக்கு கொண்டு சென்று அவர்களுக்கான ரகசிய இடத்தில் பதுக்கி வைப்பது என பெரியளவில் திருட்டு வேலைகளில் இறங்கியுள்ளனர்.  ஒரு வேளை போலீசார் தம்மை பிடித்து விடக்கூடாது என நினைத்த சுந்தரபாண்டியன், தனது காரில் தி.மு.க. கொடியையும், ஊடகம் என அச்சிடப்பட்டதையும் பொறித்துள்ளார்.

பல ஊர்களில் இதே போன்று நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை கன்னியாகுமரி போலீசார் பொறி வைத்து பிடித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலங்களை குறி வைத்து நூதன மோசடி செய்து வந்த கும்பலை சிங்கம் பட பாணியில் சாமர்த்தியமாக பிடித்த கன்னியாகுமரி போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com