சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்தின் முன்பு கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மலைக்குறவன் என்ற பெயரில் தங்கள் பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக்குற்றஞ்சாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது. இதற்கிடையில் வேல்முருகன் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தார் மற்றும் மலைக்குறவன் சமுதாய கூட்டமைப்பினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் வேல்முருகன் உடல் முதல் மனைவியான வெண்ணிலாவிடம் கடந்த 13 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | செங்கம் பகுதியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!
கடந்த 15 வருடங்களாக முதல் மனைவியான வெண்ணிலா வேல்முருகனை விட்டு பிரிந்து சேலத்தில் வாழ்ந்து வருவதாகவும், 15 வருடங்களாக வேல்முருகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும்,இதற்கிடையே முதல் மனைவியிடம் வேல்முருகனின் உடலை ஒப்படைத்து, அவரது முகத்தை பார்க்கவிடாமல் மயானத்தில் உடலை எரித்துவிட்டதாக இரண்டாவது மனைவி சித்ரா குற்றம்சாட்டி வந்தார்.
மேலும் வேல்முருகனின் இரண்டாவது மனைவி சித்ராவின் மகனுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்ரா மனு அளித்திருந்தார்.
மேலும் படிக்க | #BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....
இந்நிலையில் உயிரிழந்த வேல்முருகனின் மனைவி சித்ரா மன உளைச்சலில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை எலி மருந்து உட்கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மூலம் சித்ரா சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.