தொடரும் குற்றச்சாட்டுகள்.. என்னதான் வெற்றிமாறனின் அரசியல் பார்வை?

தொடரும் குற்றச்சாட்டுகள்.. என்னதான் வெற்றிமாறனின் அரசியல் பார்வை?
Published on
Updated on
3 min read

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம்வரும் வெற்றிமாறன், சமீபத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற குறும்பட ஆவணப்பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது தமிழ் சினிமா குறித்து அவர் பேசிய கருத்துதான் தற்போது பரவலாக பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் காரணமாகவே தமிழ்நாடு தற்போது மதச்சார்பற்ற முறையில் இருப்பதாகவும், அதனாலேயே ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுத்து, ராஜராஜசோழனை இந்து மன்னன் எனக்குறிப்பிடும் இந்த சூழலில் நாம் அரசியலை சரியாகப் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.\

இதற்குத்தான் வெற்றிமாறன் மீது பாய்ந்துள்ளன இந்து அமைப்புகள். ராஜராஜசோழன் இந்து இல்லை என்றால், அவர் ஏன் சிவனுக்கு கோயில் கட்டினார் எனவும், இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகவும் அவரை குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள எச்.ராஜா, சிவன் கோயில் கட்டிய மாமன்னன் இஸ்லாமியரா, பவுத்தரா, கிறித்தவரா என அந்த தற்குறி (படிக்காதவர்) சொல்லட்டும் என தரக்குறைவுடன் விமர்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறனை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன், இந்து மத கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை அழிக்க நூறாண்டுகளாக சதி நடந்து வரும் நிலையில், அது தற்போதும் தொடர்ந்து வருகிறது என்பதையே வெற்றிமாறனின் பேச்சு காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பேரரசு உள்ளிட்ட வலதுசாரி எண்ணம் கொண்ட திரையுலகினரும் வெற்றிமாறனை கடுமையாக சாடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் வெற்றிமாறன் உண்மையில் இதுவரை எந்த அரசியல் பேசிவந்தார் என்பது தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 5 படம் மட்டுமே எடுத்திருந்தாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், கல்வியறிவின் அவசியம், பேசியே ஆக வேண்டிய அரசியல் என அனைத்தையும் எளிதாய் கூறிய இயக்குநர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது வெற்றிமாறன்.

சாதியக் கொடுமைகளையும் தலித் மக்களின் எழுச்சியையும் தீவிர அரசியல் நோக்கில் தற்போது அரசியல் பின்புலத்துடன் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் பேசி வரும் நிலையில், எந்த கட்சியிலும் சாராமல், இதனை அவர்களுக்கு முன்னரே விசாரணை, அசுரன் படங்களால் முன்வைத்தவரும் வெற்றிமாறன் தான். 

இந்த நிலையில்தான், சைவ, வைணவ சமயங்கள் குறித்துப் பேசியதை சரியாக புரிந்துகொள்ளாமல், இந்துக்களை புண்படுத்தி விட்டதாக அவரை இந்து அமைப்புகள் சாடி வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று,  நடிகர் விஜய் அரசியல் பேசிய போது ஜோசப் விஜய் என்பது முன்னெடுக்கப்பட்ட நிலையில், வெற்றிமாறனும் கிறித்தவர் எனக்கூறி அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராஜராஜசோழன் இந்துவா எனக்கேட்டது தவறெனில், வெற்றிமாறன் ஒரு கிறித்தவன் என்ற விமர்சனம் வருவது மட்டும் சரியா என்ற கேள்வியெழுந்துள்ளது. பொதுவாகவே, சாதி மறுப்பைப் பேசுபவர்களை, சாதி மத ரீதியாகவே விமர்சிப்பது தற்போது பிரிவினைவாதிகளுக்கு கைவந்த கலையாகி வந்தபோது இந்நிகழ்வு அவர்களுக்கு மற்றுமொருவாய் மிக்சராக அமைந்ததே உண்மை.

எது எப்படியிருப்பினும் ஒடுக்கப்பட்ட "அனைத்து தர" மக்களின் வலியைப் பேசுவதாக கூறப்படும் வெற்றிமாறனின் விசாரணை படத்தையும், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தையும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது மட்டும் மாறாத ஒன்றாகவே இருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com