தங்கை மீது காதலில் விழுந்த அண்ணன், கிணற்றில் விழுந்து தற்கொலை...

தங்கையை காதலித்த இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தங்கை மீது காதலில் விழுந்த அண்ணன், கிணற்றில் விழுந்து தற்கொலை...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொல்லை மலைக்கிராமம் என்ற  ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் என்பவரது மகன் கிரீஷ். 18 வயதான இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஈரோட்டில் உள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். 

பொங்கல் விடுமுறைக்காக ஈரோட்டில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற கிரீஷ், அதே கிராமத்தைச் சேர்ந்த நாகம்மா என்பவரை சந்திப்பதற்கு சென்றுள்ளார். தந்தை நாகராஜின் அண்ணனான பசப்பா என்பவரது மகள்தான் நாகம்மா. அதாவது கிரீஷுக்கு நாகம்மா தங்கை உறவு முறையாவார். 

ஆனால் உறவு முறை தெரியாமல் நாகம்மாவும், கிரீஷும் காதலித்து வந்ததால் இந்த செய்தி உறவினர்கள் மத்தியில் இடியென இறங்கியது. இதையறிந்த பெற்றோர் முறையில்லாத உறவை முறித்துக் கொள்ளுமாறு கண்டித்ததையடுத்து சில காலம் சந்தித்து கொள்ளாமல் இருந்தனர். 

இந்நிலையில் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்கு வந்ததை அறிந்த நாகம்மாள் ஆசைக் காதலனை காண்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். கிரீஷும், நாகம்மாளும் அண்ணன் - தங்கை உறவு மறந்து காதலில் திளைத்த நேரத்தில் திடீரென நாகம்மாளின் தந்தை பசப்பா, உறவினர்களுடன் திடுதிடுவென கிரீஷின் வீட்டுக்குள் புகுந்தார். 

இருவரும் ஒரே கட்டிலில் ஒன்றாக அமர்ந்து பேசியதைக் கண்டு ஆத்திரமடைந்த பசப்பா, கிரீஷை அங்கேயே கடுமையாக தாக்கி விட்டு நாகம்மாளை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். உறவினர்கள் தாக்கியதால் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கிரீஷ், அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய தேன்கனிக்கோட்டை போலீசார் கிரீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிரீஷின் தாய் பசம்மா கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு காரணமான பசப்பா, அவரது மகன்கள் சந்திரன், கணேசன், சிவக்குமார் மற்றும் உறவினர்கள் வீரபத்திரப்பா, சரவணன் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

உறவு முறை தெரியாமல் தங்கை மீதே காதல் வைத்த இளைஞர் ஒருவர் உறவினர்களிடம் சிக்கிக் கொண்டதால் அவமானம் தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com