கடத்தியவர்களிடம் இருந்து நொடி பொழுதில் தப்பி ஓடிய சிறுவனின் தைரியச் செயல்...

7ம் வகுப்பு படிக்கும் மாணவன், தன்னைக் கடத்தியவர்களிடம் இருந்து தப்பியோடிய பதற வைக்கும் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கடத்தியவர்களிடம் இருந்து நொடி பொழுதில் தப்பி ஓடிய சிறுவனின் தைரியச் செயல்...
Published on
Updated on
2 min read

சென்னை : கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ஷர்மா(42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மித்திலேஷ் குமார் ஷர்மா(12) கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவன் மித்திலேஷை தினமும் ஆட்டோ ஓட்டுனர் சீனிவாசன் என்பவர் ஆட்டோ மூலமாக பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் 2.30மணியளவில் பள்ளி முடிந்த பின்பு மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோ ஓட்டுனர் வந்தார்.

அப்போது, சிறுவன் மித்திலேஷை ஆட்டோவின் அருகே நிற்க கூறிவிட்டு மற்ற மாணவர்களை அழைத்து செல்ல ஓட்டுனர் பள்ளிக்குள் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ அருகே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனை தாக்கி அவரது ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார். ஆட்டோவானது பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நிற்கும் போது, திடீரென சிறுவன் மித்திலேஷ் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுள்ளார். 

பின்பு சிறுவன் அருகே இருந்த பச்சையப்பன் கல்லூரி மெட்ரோவில் ஏறி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்த போலீசாரிடம் செல்போன் பெற்று சிறுவனின் தாத்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சிறுவனின் பெற்றோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சிறுவனை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். பயத்தில் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை அரவிந்த் ஷர்மா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பள்ளி வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கடத்தியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டனரா அல்லது தொழிற்போட்டி காரணமாக கடத்தப்பட்டரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com