சென்னை : நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் 12-வது தெருவில் வசித்து வருகிறார் ராதாகிருஷ்ணன் எனும் ஆர்.கே. 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு 2008-ம் ஆண்டு வெளியான எல்லாம் அவன் செயல் படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து அழகர் மலை, அவன் இவன், புலிவேஷம், ஜில்லா, பாயும்புலி, வைகை எக்ஸ்பிரஸ் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு இன்னொரு அவதாரமும் உள்ளது. வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ என்கிற நிறுவனத்தை நடத்தி வருபவர் நடிகர் ஆர்.கே.தான் என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் நடத்தி வரும் இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்தி பெரும் லாபம் பார்த்து வந்த ஆர்.கே.வுக்கு ஒரு சோகமான சம்பவம் நடந்தது.
ராஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் ஆர்.கே. சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஆர்.கே. வீட்டில் இல்லாத நேரத்தில் மூன்று பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் ராஜி. கூச்சல் போட்ட ராஜியை மர்மகும்பல் கைகாலைக் கட்டிப் போட்டு விட்டு வாயில் துணியை வைத்து அடைத்தனர்.
மேலும் படிக்க | வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை...
இதையடுத்து வீட்டுக்குள் நுழைந்த திருட்டு ஆசாமிகள், பீரோவை உடைத்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியது. இந்த சம்பவம் அறிந்து விரைந்த போலீசார் கைரேகை தடயங்கள், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆர்.கே.வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாட்ச்மேன் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்தில் இல்லாமல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காணாமல் போன ரமேசையும், கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க | செஞ்சியில் தொடரும் வாகனத் திருட்டு... கண்டுகொள்ளாத போலீசார்..