சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..! சுவாதி கண்ணீர் மல்க வாக்குமூலம்..!

சிசிடிவியில் உள்ளது நான் இல்லை..! சுவாதி கண்ணீர் மல்க வாக்குமூலம்..!
Published on
Updated on
3 min read

தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல்ராஜ் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி கண் கலங்கியவாறே வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோகுல்ராஜ்:

ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடினர்.

துண்டிக்கப்பட்ட குல் ராஜ் உடல் மீட்பு:

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. 2015, ஜூன் 24 ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. 

சிசிடிவி பதிவு:

கோகுல்ராஜ் கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்ததாகச் காவல்துறையின் அறிக்கையில் சொல்லப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை:

வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கை விசாரித்த அதிகாரி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம் யுவராஜ் தான் எனவும் சந்தேகம் எழுந்ததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது. 

யுவராஜ் சரண்:

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் யுவராஜ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பேட்டிகள் கொடுத்து வந்தவருக்கு, நெருக்கடிகள் அதிகரிக்கவே சில மாதங்களுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை:

இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் அரசுத் தரப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரியும் சித்ரா தொடர்ந்த வழக்கில், வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கு 2019, மே 5 ஆம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சாகும் வரை சிறை:

ஏழு ஆண்டு காலமாக நடைபெற்ற வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில், கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு:

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். ஆனால் அதற்கும், 164 வாக்குமூலங்கள் வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது. கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள்,

சுவாதி ஆஜர்:

சுவாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர்.

நான் இல்லை:

அதன்படி இன்றைய விசாரணைக்காக மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜரான சுவாதி, சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை எனக் கூறியதோடு, கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். உண்மையை மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நீதிபதி கேட்கவே கதறி அழுது கண்ணீர் விட்டவாரே வாக்குமூலம் அளித்துள்ளார் சுவாதி. 

நீதிபதிகள் சரமாரியாக கேள்வி:

சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் செல்வது நான் இல்லை என சுவாதி கூறியதோடு, நீதிபதிகள் கேள்வி கணைகளை தொடுத்தனர். வீடியோவில் உங்களையே நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்...எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்?  நீதித்துறை என்ன விளையாட்டு மைதானமா? என்று கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் உண்மையை மறைத்தால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்தார். 

இல்லையெனில், இந்த வழக்கில் உண்மையைக் கூறுவதால் ஏதேனும் அழுத்தங்கள், பிரச்சனைகள் எழுமெனில் அவற்றையாவது சொல்லுங்கள் என தெரிவித்தார். அதற்கு சுவாதி, எனக்கு தெரிந்தவற்றை சொல்லிவிட்டேன் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், சுவாதி அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும், காவல்துறையோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை எந்த வகையிலும் அணுகக்கூடாது என தெரிவித்து வழக்கை நவம்பர் 30ஆம் ஒத்திவைத்துள்ளனர். அன்றைய தினம் சுவாதி ஆஜராகவும் உத்தரவிட்டனர். ஒருவேளை அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com