மார்ச் 8 குடும்ப தலைவிகளுக்கு 1000 கிடைக்குமா?

மார்ச் 8 குடும்ப தலைவிகளுக்கு 1000 கிடைக்குமா?

மார்ச் 8 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

முக்கியமான வாக்குறுதி:

திமுக தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக அனைவராலும் பார்க்கப்பட்ட திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் திட்டம்  என்பது தான். ஆனால், அந்த திட்டம் இந்நாள் வரை அமலுக்கு வரவில்லை. 

உறுதியளித்த முதலமைச்சர்:

இதனிடையே, இந்த திட்டம் நிறைவேற்றபடாதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லாததால் சற்று காலதாமதமாகும் என்று தெரிவித்தார். நிதிநிலைமை சரியானதும் நிச்சயம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள்:

ஆனால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் மகளிர் மத்தியில் மட்டுமல்லாமல், எதிர்கட்சிகள் சார்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. 

மார்ச் 8 தொடங்கப்படுமா?:

இந்த நிலையில், உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தையடுத்து, மார்ச் 8 ஆம் தேதி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்ற திட்டம் அமலுக்கு வருமா? வராதா? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் வட்டமடித்து வருகிறது.

முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொருளாதார நிபுணர் குழுவுடன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.