வருகிற செப்டம்பர் 26 தொடங்கி அக்டோபர் 5 வரை கொண்டாடப்பட இருக்கும் தசரா, இந்தியாவில் படு கோலாகலமான விழாவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மைசூரு மாளிகையில், இது ஒரு திருவிழாவாக கொண்டாடப்படும் நிலையில், அக்காலத்திய ராஜ வழி வந்த முறைப்படி தசரா கொண்டாடப்படும்.
தசராவின் கஜபயணம்:
1610 ம் ஆண்டு, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தொடங்கப்பட்டதாகக் கூரப்படும் இந்த கஜபயணமானது, இன்று வரை பாரம்பரிய முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 14 யானைகள் கொண்ட இந்த யானை ஊர்வலமானது, தசரா பண்டிகையில் நடைபெறும். மேலும், மூத்த யானை ஒன்று, தங்க ஹவுடா எனப்படும் இருக்கையை, ராஜ அலங்காரத்துடன் தசராவின் கடைசி நாளான விஜயதசமி அன்று எடுத்துச் செல்லும்.
ஊர்வலத்தில் அறிமுகம்:
இதற்கான ஏற்பாடுகள் படு பயங்கரமாக இந்த மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, யானைகள் மைசூரு மண்ணை மிதித்தன. 14 டஸ்கர் யானைகள் இந்த முறை பங்கேற்கும் நிலையில், தனது அறிமுக ஊர்வலம் செய்கிறது 18 வயதான பார்த்தசாரதி. பந்திபுர் புலிகள் காப்பகத்தில் உள்ள, ராமாபுரா யானைகள் கேம்பில் இருந்து வந்த பார்த்தா, முதன் முறையாக ராஜ அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் வர இருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, 39 வயதான மகேந்திரா என்பவரும் இந்த ஆண்டு தான் அறிமுகம் ஆகிறார். இவர் நாகரஹோலே புலிகள் காப்பகத்தில் இருக்கும் மத்திகோடு யானைகள் கேம்பில் இருந்து வந்திருக்கிறார். அவருடன், கொடகுவில் உள்ள டுபாரே கேம்பில் இருந்து வந்த ஸ்ரீராமா என்ற 40 வயது டஸ்கரும் முதல் முறை மைசூரு சாலைகளில் இறங்க இருக்கிறது.
அர்ஜுனனுக்குப் பிறகு அபிமன்யூ:
மேலும், கடந்த ஆண்டு தங்க இருக்கையை எடுத்துச் சென்ற 63 வயதான அர்ஜுனா மற்றும் விஜயா இந்த வருடம் ஓய்வு பெற்றதை அடுத்து, முன்னிலை வகிக்க தயாராகி வருகிறார் உயரமான டஸ்கர் அபிமன்யூ! இந்த ஆண்டு, 18 முதல் 63 வயது வரை டஸ்கர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மத்திகோடு, பல்லே, டுபாரே, ராமாபுரா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 14 டஸ்கர்களும், இன்று சாலைகளில் வலம் வந்தனர். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி படு வரலாகி வருகிறது.
இந்த ‘கஜபயணம்’ ஆனது, தற்போது ‘ஜம்போ சவாரி’ என அழைக்கப்படுவதைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் இந்த வருட தசராவிற்காக படு ஆர்வமாக காத்து வருகின்றனர். முன்பு கொரோனா தட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரியாகக் கொண்டாடப்படாத இந்த விழாவானது, இந்த ஆண்டு, மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | மனித எல்லை பிரச்சனைக்கு பலியாக இருந்த யானை!