கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு இரு மாநில வனத்துறையினர் எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி தாமதம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வனத்தில் போதிய உணவும், தண்ணீரும் கிடைக்காததாலும், மறுபுறம் ஆக்கிரமிப்பும், கொள்ளையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாலும், காட்டு யானைகள் உணவு, தண்ணீரைத் தேடி ஊருக்குள் அவ்வப்போது வந்து போவதாக இருக்கிறது. இதனால், பல பொது மக்கள் பாதிக்க படுவதால், அவற்றை மக்கள் பல்வேறு வகையில் தாக்கி வருகின்றனர். அப்படி அறியாமையால் தாக்கப்படும் வனவிலங்குகளைக் காப்பது தான் வனத்துறையின் வேலை. ஆனால், எல்லையைப் பிரச்சனையாகக் காட்டி, நம் தமிழகத்தில், வனத்துறையினராலேயே, உடல்நலம் குன்றிய ஒரு யானை வஞ்சிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளா மாநில எல்லையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தது ஆனைகட்டி. சுமார் 70% வனப்பகுதியாக கொண்ட இந்த ஆணைகட்டியில், ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஆனைகட்டி வனப்பகுதியில், எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.
அப்படி, ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக மற்றும் கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நேற்று மாலை முதல் நின்று கொண்டிருந்துள்ளது. இந்த யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என தமிழக, கேரள வனத்துறையினர் ஆலோசித்து தாமதம் செய்து காலம் கடத்தி வந்ததால், பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
அதே சமயம் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும், தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் இந்த யானையை விரட்டியதால், உடல்நலம் குன்றிய அந்த யானையோ எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் நிற்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது.
இந்நிலையில், வனத்துறையின் எல்லை பிரச்சனையால் சிகிச்சை அளிக்கப்படாமல், என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்கும் இந்த யானை குறித்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கேரள, தமிழக வனத்துறையினர் இணைந்து, இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.
இரண்டாவது நாளாக ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதலாக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் கும்கி யானை ஆனைகட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.