ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல் சோர்வுடன் காணப்பட்ட யானை.. சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிரம்!!

ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல் சோர்வுடன் காணப்பட்ட யானை.. சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிரம்!!
Published on
Updated on
1 min read

ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானையை, கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உடல் சோர்வுடன் காணப்பட்ட யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி வனப்பகுதியில், கடந்த 15ஆம் தேதி யானை ஒன்று உடல் நலக்குறைவால், உடல் சோர்வுடன் அங்கிருந்த ஆற்றின் ஓரமாக நின்றிருந்தது. அதன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

ஏழு குழுக்களாகப் பிரிந்து வனத் துறையினர் தேடல்

இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், யானைக்கு சிகிச்சை அளிக்க, ஏழு குழுக்கள் அமைத்து 4 நாட்களாக தேடி வந்தனர். நான்கு குழுக்கள் வன எல்லை பகுதிகளிலும், இரண்டு குழுக்கள் வனத்தின் உள் பகுதியிலும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதியில், யானை இருப்பதாக வந்த தகவலை அடுத்து டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடினர்.

கண்காணிப்புக் கேமரா

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செங்குட்டை பகுதியில் யானை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், நேற்று மாலை ஊக்கையனூர் பகுதியை அடுத்த வனத்திற்குள், யானை இருப்பதாக தகவல் வந்தது. பின்னர் இரவில் ஆனைக்கட்டி வடக்கு பகுதிக்கு நகர்ந்துள்ளதை உறுதிப்படுத்திய வனத்துறையினர், அடுத்ததாக அந்த யானை நகர வாய்ப்புள்ள பகுதிகளான  செங்குட்டை, வனக்குட்டை, கோழிக்கண்டி மற்றும் ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை  பொருத்தியுள்ளனர்.

யானைக்கு விருப்பமான பலாப் பழங்கள்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருந்ததை விட சற்று உடல் நலத்துடன் இருப்பதால், அந்த யானை வனப்பகுதியிலேயே சுற்றி வருவதாகத் தெரிவித்த வனத்துறையினர், தண்ணீர் அருந்துவதற்கு ஆற்றுக்கு வரும் என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறினர். மேலும், யானைக்கு விருப்பமான பலாப்பழங்களை வெட்டி, வனத்தின் எல்லைப் பகுதியில் வைத்துள்ளனர்.

தேடும் பணியில் 2 கும்கி யானைகள்

யானை கண்டறிப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மருந்துகளையும் உணவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்துள்ள வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளையும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com