ஒரு கள்ளக்காதலிக்கு ரெண்டு பேர் போட்டா போட்டி...

கள்ளக்காதலியின் மீது ஆசைப்பட்ட 56 வயது முதியவரை இளைஞர் ஒருவர் கல்லைக் கட்டி கிணற்றில் போட்டுள்ளார்.
ஒரு கள்ளக்காதலிக்கு ரெண்டு பேர் போட்டா போட்டி...
Published on
Updated on
2 min read

திருச்சி | கருவம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான கந்தசாமி. 56 வயதான இவரது மனைவி இறந்ததையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்துள்ளார். அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் கொண்ட கந்தசாமி, வேலைக்கு சென்று சம்பாதித்த சிறிதளவு தொகையை தங்கையிடம் அளித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 4-ம் தேதியன்று சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து தங்கையிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திருச்சி கிளம்பியவர் மறுநாளே காணாமல் போயிருந்தார். தன் அண்ணன் மாயமானதால் தங்கை பதறிப்போய் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு ஊர் மத்தியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாய் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, உயிரிழந்தது கந்தசாமி என உறுதியான தகவலும் வெளியானது.

கந்தசாமிக்கு பல்லடத்தைச் சேர்ந்த கரண் என்ற 28 இளைஞனுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. டாஸ்மாக்கில் ஒன்றாக சேர்ந்து மதுஅருந்தியதில் இருந்து தொடங்கிய நட்பானது வயது வித்தியாசம் பார்க்காமல் வளர்ந்து வந்துள்ளது. 

இதற்கிடையே கரணுக்கு, அதே ஊரைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலும் இருந்து வந்தது. கந்தசாமியுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது சசிகலா குறித்து வாய் திறந்துள்ளார் கரண். அப்போதிருந்து கரணின் கள்ளக்காதலியை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை கந்தசாமியின் மனதுக்குள் ஊறியது. 

ஒரு கட்டத்தில் இதுகுறித்து கந்தசாமி, கரணிடம் கேட்கவே, பிரச்சினை வெடித்தது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி திருச்சி செல்வதாய் கிளம்பியவர் வழக்கம் போல கரணைப் பார்த்து மது அருந்தி விட்டு பேருந்து நிலையம் செல்வதற்கு முடிவெடுத்தார். 

அப்போது கந்தசாமி கரணின் கள்ளக்காதலி சசிகலா குறித்து விசாரித்ததையடுத்து இருவருக்குள்ளும் சண்டை மூண்டது. 56 வயதானபோதும், என் காதலி மீது ஆசைப்படுகிறாயா? என ஆத்திரம் பொங்க எழுந்த கரண், கந்தசாமியை கடுமையாக தாக்கினான்.

மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு, கந்தசாமியின் உடலில் கயிறால் கல்லைக் கட்டி கிணற்றுக்குள் தள்ளினான். கந்தசாமியை கொலை செய்தபோதும், எதுவுமே தெரியாதது போல மறுநாள் அவரையே ஊரெல்லாம் தேடுவது போல நாடகமாடினான் கரண். 

கந்தசாமியின் செல்போனில் கிடைத்த தகவலை வைத்தே துரிதமாக விசாரித்த பல்லடம் போலீசார், கரண் மற்றும் சசிகலா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை விட சிறு வயது இளைஞன்தானே என இணக்கமாய் பழகிய ஒருவருக்கு கடைசி நேரத்தில் இப்படியொரு சாவா? என குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் வேதனையில் துடிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com