தூத்துக்குடி : கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர்.
கொத்தனாராக வேலை பார்த்து வந்த ராஜபாண்டிக்கு தானும் புதிதாக பெரிய வீடு கட்ட வேண்டும் என்கிற லட்சியம் இருந்து வந்திருக்கிறது. இரவு பகலாக கடுமையாக உழைத்துப் பணம் சேர்த்த ராஜபாண்டி, பெருமாள் நகரில் 3 சென்ட் அளவில் நிலம் வாங்கிப் போட்டிருந்தார்.
மேலும் படிக்க | பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறித்த செவிலியர்கள்...
இதில் தனக்கென தனியாக வீடு கட்ட வேண்டும் என நினைத்தவர், வங்கிகளில் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி கட்டிட வேலைகளைத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கை மீறி செலவு செய்தவர் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்க்கு புதிதாக வீட்டைக் கட்டி கடந்த ஜூலை மாதம் கிரகப்பிரவேசம் செய்தார்.
வாழ்க்கையில் சந்தோஷம் பெருகி வந்தாலும், சில காலமாக கடன் பிரச்சினையும் இவர்களின் கழுத்தை இறுக்கி வந்துள்ளது. படிக்கும் வயதில் பிள்ளைகள் இருப்பதால் முழு கடன் சுமையும், குடும்பத் தலைவர் ராஜபாண்டியின் மீது விழுந்திருந்தது.
மேலும் படிக்க | பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
ஒரு கட்டத்தின் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ராஜபாண்டிக்கு நெருக்கடி கொடுத்ததையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். மேலும் கடன் பிரச்சினையால் ராஜபாண்டிக்கும், மனைவி பரணி செல்விக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் ஞாயிறு இரவு மகன் மனோஜ்குமார் அவரது பெட்டிக் கடையைக் கவனிக்கச் சென்று விட்டார். மகள் உமாவும் வெளியே சென்ற நிலையில் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை வெடித்துள்ளது.
அதிக கடன் சுமையால் ஏற்கெனவே மனம் உடைந்து போன ராஜபாண்டி, கட்டிய மனைவியென்றும் பாராமல் பரணிசெல்வின் கழுத்தை கத்தியால் குத்திக் கிழித்தார். கண் முன்பே மனைவி சரிந்து விழுந்து இறந்ததைப் பார்த்தவர், தன்னைத்தானும் குத்திக் கொண்டு இறந்து போனார்.
பெட்டிக்கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற மனோஜ்குமார், உள்பக்கமாக வீடு பூட்டியிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியால் உள்ளே சென்று பார்த்தபோது, தாய் - தந்தை இருவருமே கழுத்தறுபட்டு உயிரிழந்ததைக் கண்டு கதறித்துடித்தார்.
மேலும் படிக்க | இப்படியெல்லாம் திருடுவார்களா... நூதன திருடனால் அதிர்ச்சி...
அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால் சமாளிக்க முடியாத தம்பதி, புதிய வீடு கட்டிய சில மாதத்திலேயே அவர்கள் முடிவை அவர்களாகவே தேடிக் கொண்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.