தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் நாடாங்குளம் அருகே நீரேற்றும் நிலையத்திற்கு மின்தடை ஏதுமின்றி நீரேற்றுவதற்கு வசதியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிர் அழுத்த மின் பாதை அமைப்பதற்கு வசதியாக நாடாங்குளம் அருகே 3 தலைமுறைகளாக இருந்து வரும் புளியமரம் மற்றும் அப்பகுதியில் உள்ள 53 பனை மரங்களையும் அகற்றும் முயற்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், மரங்களை அகற்றக் கூடாது என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில் அகற்ற முயல்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி, உதவி கோட்ட செயற்பொறியாளர் மிகாவேல், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மரங்கள் மற்றும் மரக்கிளைகள் எதையும் அகற்றாமல் மாற்றுபாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையும் படிக்க : பாஜகவை சரமாரியாக தாக்கி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி!