ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (23) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவரது மனைவி வசந்தா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. கர்ப்பமாக இருந்த வசந்தாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி உத்தனபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அன்று மாலை வசந்தாவிற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் வராததால் அங்குள்ள செவிலியர்களே வசந்தாவுக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
குழந்தை பிறந்த போது குழந்தைக்கு வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் எலும்பு முறிவு குறித்து குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் உடனடியாக குழந்தையையும் தாயையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தையின் தாய் மற்றும் உறவினர்களுக்கு குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து தெரியவந்துள்ளது. தற்போது ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உத்தனப்பள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலட்சியமாக வேலை பார்த்த செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.