மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...

போதை ஆசாமிகள் இருவரும் ஒருவருக்கொருவர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்திக் கொண்டனர். தலையில் 31 தையல் போடப்பட்ட ஒருவர் உயிருக்கு போராடும் நிலையால் பதற்றம் நிலவியுள்ளது.
மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை : ஆலங்குடியில் உள்ள ஒரு கோவிலில் சிற்ப வேலைகள் நடைபெற்று வந்தது. இதற்காக சிவகங்கையில் இருந்து சிற்ப வேலைகள் பார்ப்பவர்கள் சிலரை கோவில் நிர்வாகம் புதுக்கோட்டைக்கு வரவழைத்திருந்தது. 

தேவக்கோட்டையைச் சேர்ந்த ரவி மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவரும் ஆலங்குடியில் தங்கியிருந்து சிற்ப வேலைகளைக் கவனித்து வந்தனர். கோவில் வேலை பார்க்க வேண்டுமென்றால் பல நாட்கள் தீவிரமாக விரதம் இருந்து கவனிக்க வேண்டும் என்கிற வழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர்களோ, காலையில் பக்திமான்களாக பட்டையும் கொட்டையுமாக சிற்ப வேலை செய்தவர்கள் மாலை நேரம் போதை ஆசாமிகளாக சுற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் செலவைக் கவனித்து வந்த நிலையில் திடீரென சண்முகநாதனுக்கு அதிகப்படியாக பணம் விரயமாகி விட்டது. இதனால் ரவியே தொடர்ந்து 2, 3 நாட்களாக செலவு செய்ய நேர்ந்தது. 

எங்கு சென்றாலும் இணைந்தே செல்லும் ரவியும், சண்முகநாதனும் நேற்று (31 அக்.) திங்கட்கிழமை மாலையில் வழக்கம் போல டாஸ்மாக் உள்ளே நுழைந்தனர்.  மது அருந்தி போதையாகி விட்ட பிறகு ரவிக்கும், சண்முகநாதனுக்கும் இடையே வாய்த்தகராறு தொடங்கியது. பாரில் இருந்து வெளிவந்த பின்னரும் அவர்களுக்குள் சண்டை நீடித்தது. 

சிகரெட் வாங்கும் போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழத் தொடங்கியது. பொது இடம் என்றும் பாராமல் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளைப் பேசிக் கொண்டே ஒருவர் மீது ஒருவர் கற்களை எறியத் தொடங்கினர். கல்லுக்குள் சிற்பம் உறங்கும் என்பதை அறிந்தாலும் போதையில் கிடைத்த கற்களை எடுத்து சரமாரியாக எறிந்தனர். 

உச்சகட்ட போதையில் சரமாரியாக கற்களை வீசியதில் ரவியின் தலையில் பலத்த ரத்தம் பொங்கியது. இந்த களேபரத்தைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் விலக்கி விட்டு ரவியை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கற்களை எடுத்து வீசியதில் ரவி தலையில் 25 தையல் மற்றும் உடலில் 31 தையல் போட்டு உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

வெளிமாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக வந்த சிற்பத் தொழிலாளர்கள், வருமானத்தைப் பெருக்காமல் குடியினால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டது அந்த பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com