திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள அரிச்சந்திராபுரம் பீம்நகரைச் சேர்ந்தவர் சப்ஜாணி என்பவரின் மகன் அஜ்மல். 23 வயதான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஹமானின் மகன்கள் அதவுல்லா, பாட்ஷா, அஸ்ரப்பள்ளி ஆகியோருடன் பல மாதங்களுக்கு முன்பு பிரச்சினை எழுந்து வந்திருக்கிறது.
இருவரும் அடுத்தடுத்த வீட்டினர் என்பதால் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு நாள்பட வளர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த முன்விரோதம் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு, அஜ்மலுக்கும், அதவுல்லா மற்றும் அவரது தம்பிகளுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறித்த செவிலியர்கள்...
இதனைக் கவனித்த ஊர்ப் பெரியவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து, சமரசம் பேசி வைத்து அனுப்பியிருக்கின்றனர். ஆனாலும், இந்த விவகாரத்தை போலீசாரிடம் தெரிவித்தால்தான் ஒரு முடிவுக்கு வரும் எனவும் அஜ்மலின் தரப்பு நினைத்துள்ளது.
இதற்காக ஒரு முறை காவல்நிலையம் வரை சென்று முறையிட்டாலும் போலீசார், இந்த பிரச்சினையில் ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை விடியற்காலை 4 மணியளவில் அஜ்மலின் இருசக்கர வாகனத்தை அதவுல்லா, அஸ்ரப்பள்ளி ஆகியோர் தீயிட்டு எரித்துள்ளனர்.
மேலும் படிக்க | இப்படியெல்லாம் திருடுவார்களா... நூதன திருடனால் அதிர்ச்சி...
இதையறிந்து அதிர்ந்த அஜ்மல், போலீசாரிடம் சென்றால் நியாயம் கிடைக்காது என நினைத்தவர் ஊர்ப் பெரியவர்களை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஊருக்கு மத்தியில் சுமார் 60 பேர் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த கட்டப்பஞ்சாயத்தில் அஜ்மல் தரப்புக்கும், அதவுல்லா தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை உண்டானது.
அப்போது ரஹ்மான் அவரது மகன்களுடன் இணைந்து அஜ்மல், மஸ்தான், படாபா, அமீது ஆகிய நான்கு பேரையும் பட்டாக்கத்தியால் குத்திக் கிழித்தார். இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் சண்டையை விலக்கி விடுவதற்கு முயன்றனர். ஆனால் தடுக்க வந்த பொதுமக்களையும் அதவுல்லா தரப்பு, கத்தியால் கிழிப்பதற்கு முயற்சி செய்ததையடுத்து கட்டப்பஞ்சாயத்து, கத்திக்குத்து பஞ்சாயத்தானது.
மேலும் படிக்க | விளையாட்டு வினையானது... கர்நாடகாவையே உலுக்கிய சம்பவம்..
கத்திக்குத்து சம்பவம் அறிந்த திருவாலங்காடு போலீசார், சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சினையை சரியாக கையாளாகாத காரணத்தினால் கட்டப்பஞ்சாயத்து வரை சென்றிருக்கிறது.
ஆரம்பத்திலேயே போலீசார், இவர்களின் பிரச்சினையில் தலையிட்டு சமூகத்தீர்வு ஏற்படுத்தியிருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்க முடியும் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.