ஆற்று மணலை கடத்திய பஞ்சாயத்து தலைவர்... இதுதான் 100 நாள் திட்டமா?

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மணல் கடத்தலுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள 50 பெண்கள் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆற்று மணலை கடத்திய பஞ்சாயத்து தலைவர்... இதுதான் 100 நாள் திட்டமா?
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் : திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில் ஓடுகிறது கொசஸ்தலை ஆறு. கனமழை இன்னும் சில நாட்களில் அதிகமானால் வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்ட நிலையில் திடீரென ஆற்றுக்குள் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கினர். 

பருவமழையையொட்டி ஆற்றை தூர்வாரத்தான் வேலை நடக்கிறது என ஊர் மக்கள் நினைத்த நிலையில் ஆற்று மண் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்டு வந்தது. சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மதினா என்பவரின் கணவர் உத்தரவின் பேரில் 100 நாள் திட்டத்தைச் சேர்ந்த 50 பெண்கள் மண் அள்ளும் வேலையில் இறங்கினர். 

ஊருக்குள் மண் எடுக்க வேண்டுமென்றால் தாசில்தாரில் தொடங்கி, வருவாய் வட்டாட்சியர் என அனைவரின் உத்தரவையும் பெற வேண்டும் என்பது விதியாக இருந்து வருகிறது. ஆனால் இவர்கள் ஒருவரின் அனுமதியும் இல்லாமல் மண் அள்ளுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனுமதி கொடுத்திருக்கிறார். 

இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் ஆற்று மண்ணை மூட்டைக் கட்டி வந்த தொழிலாளர்களிடம் கேட்டறிந்தனர். ஆனால் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களை எதற்கு வரவழைத்தார்கள் என்றே தெரியாமல் வந்ததாக கூறியனுப்பியுள்ளனர். 

ஊராட்சி மன்றத் தலைவர் தங்கள் சுயலாபத்துக்காக  மண்ணை மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று இரவோடு இரவாக விற்பனை செய்வதற்காக காத்திருப்பதாக ஊர் மக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். பொறுப்புள்ள பதவியில் இருப்பவதே இயற்கை வளத்தைச் சுரண்டுவதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள், தற்போது கலெக்டரின் உதவியை நாடியுள்ளனர். 

மணல் கடத்தலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கை செல்லுபடியாகுமா? இதுதான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டமா? பதவியில் உள்ளவர்கள் மீதும் சட்டம் பாயுமா? பொறுத்திருந்த பார்க்கலாம்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com