தமிழ்நாடு

கோவை குண்டுவெடிப்பு மேலும் ஒருவர் கைது!!!

Malaimurasu Seithigal TV

கோவை உக்கடம் குண்டு வெடிப்பு வழக்கில், 6வது நபராக ஜமேஷா முபின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை உக்கடம் அருகே கடந்த 23-ம் தேதி  காரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். மேலும் விபத்து நடந்த இடத்தில்  இரும்பு ஆணிகள், வெடித்த குண்டுகளும் சிதறிக் கிடந்தன. 

5 பேர் கைது:

இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார்,  உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா,  முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார்,  அவர்களின் இ-மெயில், வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். 

முதலமைச்சர் உத்தரவு:

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து  தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி. கே.பி.வந்தனா தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். 

6வது நபர் கைது:

இந்தநிலையில் 6வது நபராக முபினின் உறவினரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குண்டு தயாரிப்புக்காக முபின் பிளிப்கார்ட், அமேசான் போன்ற வணீக வலைதளங்களில் இருந்து 76 புள்ளி 5 கிலோ ரசாயனங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.