தமிழ்நாடு

சூப்பர்ஸ்டார் ரஜினி-யின் 72-வது பிறந்தநாளை தீப்பறக்க கொண்டாடும் ரசிகர்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ஏழு கோடி தமிழ் மக்கள் நெஞ்சத்தையும் காந்தமாய் ஈர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு புகழ்மாலை சூட்டுகிறது இந்த பதிவு.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டை வருடந்தோறும் குறிப்பாக டிசம்பர் மாதங்களில் பல புயல்கள் வந்து மக்களை பீதி கொண்டு கொண்டிருக்கும். வர்தா, புரெவி, ஒக்கி, கஜா, முதல் தற்போது ஆட்டம் காட்டும் மாண்டஸ் வரை எத்தனையோ புயல்கள் வந்தபோதும், இதற்கெல்லாம் ஒரு போதும் சளைத்ததல்ல ரஜினி புயல்.. எப்போது வரும் எப்படி வரும் என யாருக்கும் தெரியாது.. ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே கலக்கிக் கொண்டிருக்கும்.

சாதிக்க வேண்டும் என்கிற வெறியுடன் சொந்த ஊரை விட்டு சென்னை வந்திறங்கிய சிவாஜிராவ் கெய்க்வாட், தனிப்பட்ட திறமையாலும், தன்னிகரற்ற நடிப்பினாலும் தனிவரலாறு படைத்தார் இந்த தனிக்காட்டு ராஜா. இன்றைக்கு சினிமா எனும் இமயத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்தபோதும், அவர் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை.. 

லட்சியத்தை நோக்கி புயல் வேகத்தில் சுழன்றடிக்கும் ரஜினிகாந்தை நினைத்து மெச்சாதவர்களும் இல்லை.. உச்சி கொட்டாதவர்களும் இல்லை.. சினிமா ரசிகர் ஒவ்வொருவருக்குமே தனித்தனி நடிகர்களின் மீது ஒரு வித ஈர்ப்பு உண்டு. ஆனால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களுக்குமே மிக மிக பிடித்தமான, பின்பற்றும்படியான வரலாற்று நாயகனாக விளங்குகிறார்.

ரஜினி என்றால் ஸ்டைல்.. ரஜினி என்றால் தன்னம்பிக்கை.. ரஜினி என்றால் ப்ராண்ட்.. ரஜினி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே ஒருவித பாசிட்டிவ் வைப்ரேஷன் ஊடுருவுவது நிச்சயம்.. சினிமா எனும் ரேஸில் வெள்ளை குதிரைகளின் மீதே பணத்தை கட்டி வந்த தயாரிப்பாளர்கள் மத்தியில் வெற்றிக்கு வண்ணம் தேவையில்லை என உணர்த்தியவர் ரஜினி.. 

பல நடிகர்களின் திரைப்படங்கள் சொந்த மாநிலத்திலேயே மண்ணைக்கவ்விய நிலையில் ரஜினி படமோ, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலும் வெற்றி வாகை சூடியது. நடிப்புக்காக பல படங்கள் ஓடியதென்றால் ஸ்டைலுக்காக மட்டுமே நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ஓடியது.

முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, நல்லவனுக்கு நல்லவன் ஆகிய படங்களில் எதார்த்த நடிப்பின் மூலம் சாமானிய ரசிகர்களையும் வசீகரித்த பெருமைக்கு சொந்தக்காரரும் ரஜினி ஒருவரே.. 

நடனத்தில் கலக்க தேவையில்லை.. பக்கம் பக்கமாக வசனம் பேசத் தேவையில்லை... திரையில் வந்து நின்றாலே போதும். சுனாமியும், நிலநடுக்கமும் ஒருங்கே வந்தது போல அப்படியொரு ஆர்ப்பரிப்பு ரசிகர்களிடத்தில் இருந்து எழும்.. இந்தியாவிலேயே ரஜினிகாந்துக்கு இருந்த ரசிகர் படையைப் போல என்றுமே இருப்பதும் இல்லை. இனிமேல் இருக்கப்போவதும் இல்லை.  கருப்பு வெள்ளை, கலர், 3டி, அனிமேஷன் என சினிமாவின் எல்லா காலகட்டத்திலும் பயணித்ததிலும் தனிப் பெருமை பெற்றுள்ளார். 

பொதுவாக தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என புதிய புதிய பண்டிகைகள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை டிசம்பர் 12-ம் தேதியான இன்றுதான் பொங்கலும்.. தீபாவளியும்.. அதற்கு திரையரங்குகளில் ரீ ரிலிஸ் ஆகியிருக்கும் பாபா திரைப்படமே மிகச்சிறந்த சாட்சி.. 

சினிமாவில் அறிமுகமாகி 45 வருடங்களைக் கடந்தபோதும், நம்பர் ஒன் இடத்திலேயே திகழ்வது வேறு யாருக்கும் வாய்க்காத ஒன்று.. குறிப்பிட்ட காலத்தோடு கலைப்பயணத்தை முடித்துக் கொள்ளாமல் வாழ்நாள் முழுவதையுமே ரசிகர்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் 72-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்நாளே தங்களுக்கு நன்னாள் என கொண்டாடித் தீர்க்கின்றனர் ரசிகர்கள்.. 

அபூர்வராகங்கள் முதல் ஜெயிலர், லால் சலாம் வரை 170 திரைப்படங்களைத் தாண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் வெற்றிக்கு திரையரங்க கொண்டாட்டமே சாட்சி..  என்றென்றும் தொடரும் ரஜினி எனும் வெற்றிக்குதிரையின் ஆட்சி..

மாலைமுரசு செய்திகளுக்காக சக்தி