மற்றவை

விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம்... சாமியாக கும்பிடும் கிராம மக்கள்...

கே வி குப்பம் அருகே கனமழையால் கீழே விழுந்த மரம் எழுந்து நின்ற அதிசயம் நடந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வேலூர் | கே வி குப்பம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து  மின் கம்பங்கள் தென்னை வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம் அடைந்தன. இந்நிலையில் கேவி குப்பம் அடுத்த வேப்பங்கநேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வேகேட் ஒட்டிய பகுதியில்  படவேட்டு அம்மன் ஆலயம் உள்ளது.

இந்த படவேட்டு அம்மன் ஆலயம் அருகில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் கோவில் அருகே இருந்த  அரசமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. வேரோடு சாய்ந்த அரசமரத்தை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நேற்று முன்தினம் மர கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு மரத்தின் அடிப்பகுதியை வெட்டாமல் விட்டுச் சென்றனர்.

நேற்று காலை படவேட்டு அம்மன் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் வேரோடு சாய்ந்து தரையில் கிடந்த அரச மரம் தானாக எழுந்து நின்றது கண்டு கிராம மக்கள் ஆச்சிரம் அடைந்தனர். இந்நிலையில் வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த அரசமரம் தானாக எழுந்து நின்ற சம்பவம் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இன்று காட்டுத் தீ போல் பரவியது.

தகவல் அறிந்த சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் சாய்ந்து விழுந்து எழுந்து நின்ற அரச மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியும் அருள் வந்து ஆடியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இதனிடையே கனமழையால் சாய்ந்து கீழே விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டபட்டதால் மரத்தின் எடை குறைந்து மரம் தானாக எழுந்து நின்றதால் கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து சாமி வழிபாடு செய்யும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.