க்ரைம்

சின்ன பிரச்சனை கத்திகுத்தாக மாறிய அவலம்.. நாய் வந்து தடுத்த சிசிடிவி காட்சிகள்...

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் | தீயணைப்பு நிலையம் எதிரே நகைக்கடை நடத்தி வருபவர் சதீஷ் ஆனந்த். 52 வயதான இவருக்கு பழனி ரெயில்வே பீடர் சாலையில் உள்ள வள்ளுவர் திரையரங்குக்கு பின்னால் சொந்தமாக நிலம் இருந்துள்ளது. இந்த இடத்தில் கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்ட நிலையில் இதன் ஒரு பகுதி தனக்கு சொந்தம் வள்ளுவர் திரையரங்க உரிமையாளர் நடராஜன் என்பவர் கூறியுள்ளார். 

நடராஜனுக்கும், சதீஷ் ஆனந்துக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 8-ம் தேதியன்று காலையில் நகைக்கடை உரிமையாளர் சதீஷ் ஆனந்த் அந்த பகுதியில்  நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திரையரங்க உரிமையாளர் நடராஜனுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது இடத்தை யாருக்கும் விட்டுத்தர முடியாது என சதீஷ் கூறவே, ஆத்திரமடைந்த அந்த மர்மநபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்மூடித்தனமாக குத்திக்கிழித்தார். 

இதனால் பதறிப்போன சதீஷ் தப்பியோட முயன்றும் துரத்திய அந்த நபர், வயிறு, கை, தோள் ஆகியவற்றில் குத்திக் கிழித்தார். இதைப் பார்த்து திடுக்கிட்ட பொதுமக்கள் சம்பவத்தை தடுத்து நிறுத்தி படுகாயமடைந்த சதீஷை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய பழனி நகர போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் கணபதி நகரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரை கைது செய்தனர். 

சதீஷ் ஆனந்துடன் நிலத்தகராறில் இறங்கிய நடராஜன் ஏற்கெனவே 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதாகியிருந்தார். பிறரின் நிலங்களை பறிமுதல் செய்வதும், அதற்கு மறுப்பு தெரிவித்தால் கூலிப்படையை ஏவி கொலை செய்வதும் என இப்படியான வேலைகளில் இறங்கியிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நகைக்கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை கவனிக்கையில் மனிதனின் ஆபத்தை அறிந்து துடிக்கும் அந்த நாய்க்கு உள்ள பரிதவிப்பில் பாதி கூட சுற்றியிருந்தவர்களுக்கு இல்லை என்பதுதான் கூடுதல் சோகம்.