க்ரைம்

நல்லது செய்ய முயன்றவர் அரிவாள் வெட்டுடன் மருத்துவமனையில் அனுமதி...

தொண்டு நிறுவன உரிமையாளருக்கு அரிவாள் வெட்டுப்பட்டு, படுகாயத்துடன் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி | திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பால குமரேசன் (48). இவர் ஆதவா தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் பால் பண்ணை மற்றும் ரெஸ்டாரன்டையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து திருட்டு வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை ஆறுமுகநேரி  போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தை ஆதவா தொண்டு நிறுவன உரிமையாளர் பாலகுமரேசன் மற்றும் சீனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிலர் முன்னெடுத்துச் சென்றனர்.

இதனால் சீனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரின் லோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனை அடுத்து ஆதவா தொண்டு நிறுவனத்தின் பால் பண்ணையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முறையாக எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் ஆறுமுகநேரி பகுதி மக்கள் கடுமையான அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஆதவா ரெஸ்டாரண்டில் உரிமையாளர் பாலகுமரேசன் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாள் மற்றும் பணை மரத்தின் கருக்கு மட்டையை கொண்டு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலகுமாரேசனை தலையில் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை  தொண்டு நிறுவன பணியாளர்கள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம்  அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்டு ஆறுமுகநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிகளில் கஞ்சா போதை பழக்கத்தால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் சிறப்பு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.