இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்...!

இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்...!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாட்களாக 800 க்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியர்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று காலை தொடங்கி இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஊதிய முரண்பாட்டை களையக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில்  இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முறைப்பாடு களையபடும் எனவும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என அறிவித்துட்டு ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேலாகியும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என கூறி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சிதம்பரம் நடராஜர் கோயில்ஆருத்ரா தரிசன விழா...! கொடியேற்றத்துடன் தொடங்கியது...!