கவர் ஸ்டோரி

சும்மா தான்யா சொன்னேன்...மோடி குறித்த கருத்தில் பின் வாங்கிய கார்கே!!!

தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக தனது கருத்துக்களை தவறாக பயன்படுத்துகிறது.  நான் கொள்கைகளில் அரசியல் செய்கிறேன், தனிநபரை அல்ல. 

Malaimurasu Seithigal TV

குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கார்கே, பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலிலும் தனது முகத்தை மக்களிடம் காட்டி வாக்கு கேட்கிறார் என்று கூறியிருந்தார்.

அதாவது “உங்களுக்கு எத்தனை முகங்கள், நீங்கள் ராவணனைப் போல 100 தலையா கொண்டுள்ளீர்கள்?” எனப் பேசியிருந்தார்.  கார்கேவின் இந்த பிரச்சாரத்திற்கு பிறகு, பாஜக ஆக்ரோஷமாகி, இது பிரதமர் மோடியையும் குஜராத்திகளையும் அவமதிப்பதாக உள்ளது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.

பாஜகவின் கண்டனம்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராவணன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  கார்கே தனது கருத்துக்கு முதல்முறையாக பதிலளித்துள்ளார். பாஜக தனது கருத்துக்களை தேர்தல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

விளக்கமளித்த கார்கே:

மேலும் காங்கிரஸ் செய்யும் அரசியல் என்பது எந்த ஒரு நபருக்கும் எதிரானது அல்ல என்றும் அது அரசியல் கொள்கைகள் சார்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் நாங்கள் செயல்திறன் அரசியலையே நம்புகிறோம் எனவும் ஆனால் பாஜகவின் அரசியல் பாணி பெரும்பாலும் ஜனநாயகத்தின் உணர்வைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மைய அரசியல்:

தொடர்ந்து பேசிய கார்கே ​​பிரதமர் மோடியை குறிவைத்து பேசும் போது பாஜகவின் அரசியல் எல்லா இடங்களிலும் ஒரு சிறப்பு நபரை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.  

அரசியல் அனுபவம்:

அதனைத் தொடர்ந்து கார்கே கூறுகையில், அவருக்கு 51 வருட பாராளுமன்ற அரசியல் அனுபவம் உள்ளது எனவும் அதனால்தான்  எந்த ஒரு நபரைக் குறித்தும் தனிப்பட்ட கருத்துகளை கூறுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் வளர்ச்சி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்னைகளில் பாஜக அரசை விமர்சித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்