லோக்சபா தேர்தல் 2024 காரணமாக இப்போதிலிருந்தே அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான முகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன.
நிதிஷ் குமார் முதல் கே.சி.ஆர் வரை போட்டியாளர்கள் பலர் உள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் நிதிஷ் குமாரை பிரதமருக்கான வலுவான வேட்பாளர் என்று கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் நிதிஷ் பிரதமராக முடியுமா என்பதுதான் கேள்வி. இதற்கு அவருக்கு எத்தனை இடங்கள் தேவைப்படும்? நிதிஷ்குமார் இதுவரை எத்தனை கட்சிகளின் ஆதரவு பெற்றுள்ளார்? என்பதைப் புரிந்து கொள்வோம்...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், ”நாங்கள் உயிருடன் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.” என்று கூறினார்.
“முன்பு பாஜகவுடன் இருந்தோம், இப்போது அவர்களிடமிருந்து பிரிந்துவிட்டோம். அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி, எல்கே அத்வானி ஜி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் நிறுவனர்களாகவும் முக்கிய தலைவர்களாகவும் இருந்துள்ளனர். மத்திய அரசிலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். 1998-ல் அடல் ஜி அவரது அரசில் எங்களை அமைச்சராக்கினார். மூன்று துறைகளின் பொறுப்புகளை நாங்கள் கையாண்டோம். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.” என்று தெரிவித்தார்.
நிதிஷ்குமார் இப்போது தனது ஒவ்வொரு அறிக்கையிலும் மாநில அரசியலையும், மத்திய அரசியலையும் குறிப்பிட மறப்பதில்லை. இதனால் தான் பலமுறை மறுத்தாலும், நிதிஷ் குமார் பிரதமராகும் கனவில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எத்தனை இடங்கள் தேவை?:
மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. தற்போது பாஜக 303 இடங்களைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் 53, திமுக 24, திரிணாமுல் காங்கிரஸ் 23, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22, சிவசேனா 19, ஜேடியு 16, பிஜேடி 12, பிஎஸ்பி 10, டிஆர்எஸ் 9, எல்ஜேஎஸ்பி 6, என்சிபி 5, டிடிபி 3, சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். இது தவிர வேறு சில சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர்.
நிதிஷுக்கு ஆதரவான கட்சிகள்:
அதிகாரப்பூர்வமாக தற்போது நிதிஷ் குமாருக்கு ஆர்ஜேடி ஆதரவு மட்டுமே உள்ளது. நிதிஷ்குமாரின் ஜேடியுவுக்கு 16 எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் ஆர்ஜேடிக்கு உறுப்பினர் இல்லை. சமாஜ்வாடி, என்சிபி, சிபிஐ (எம்) ஆகிய கட்சிகளின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்களவையில் எஸ்பி கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது தவிர என்சிபிக்கு 5 உறுப்பினர்களும், சிபிஐ (எம்)க்கு 3 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த வகையில், தற்போதைய மக்களவையின் படி, நிதிஷ்குமாரிடம் 27 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர் மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருவருக்குள்ளும் பிரதமராகும் விருப்பம் உள்ளதாகவே தெரிகிறது. இது தவிர, காங்கிரசை சேர்ந்த ராகுல் காந்தியும் இந்த போட்டியில் உள்ளார். தற்போது கேசிஆர் கட்சிக்கு ஒன்பது எம்பிக்களும், மம்தா கட்சிக்கு 23 எம்பிக்களும் உள்ளனர். காங்கிரசுக்கு அதிகபட்சமாக கூட்டணி கட்சிகள் உட்பட 90 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தவிர திமுக உள்ளிட்ட சில கட்சிகளும் அவர்களுடன் இருக்கின்றனர்.
நிதிஷ் பிரதமராகும் வாய்ப்புள்ளதா?:
பீகாரில் மகா கூட்டணியில் சேர நிதிஷ்குமாரை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வற்புறுத்தினார். இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிரமோத் சிங் கூறுகையில், ”லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டு அவர் பிரதமரானால், பீகாரின் தலைமை, தேஜஸ்வி வசம் செல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ”ஆர்ஜேடி உதவியுடன் நிதிஷ் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவையும் பெற முடியும். தென்னிந்திய அரசியல் கட்சிகளை நிதிஷ் அவருக்கு ஆதரவாக மாற்ற வேண்டும். இது தவிர இதில் காங்கிரசின் பங்கும் மிக முக்கியமானது. காங்கிரஸ் இல்லாமல் நிதிஷ்குமாரால் ஆட்சி அமைக்க முடியாது.” என்றும் கூறியுள்ளார்.