பிரதமர் தேர்தல் நான்முனை போட்டியா?

பிரதமர் தேர்தல் நான்முனை போட்டியா?

இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பான முறையில் ஆட்சி செய்தது.  காங்கிரஸ் ஆட்சியில் நாடு பல்வேறு முன்னேற்றங்களை கண்டது.  வளர்ச்சியடையாத நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகள் என்ற நிலையை அடைந்தது.  இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது.  

காங்கிரஸ் முதல் முறையாக 1977ல் நடந்த பொது தேர்தலில் தோல்வியை சந்தித்தது.  அதன் பின்னர் வெற்றி பெற்றாலும் வாக்கு விகிதம் குறைந்து கொண்டே சென்றது.  சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் உதவியுடனே ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.  1998 தேர்தலுக்கு பிறகு பாஜக அதிக அளவில் மக்கள் செல்வாக்கு பெற தொடங்கியது. 1999 தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

பாஜக தொடர் வெற்றிகள்:

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014 தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.  அதனை தொடர்ந்து நடைபெற்ற பொது தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது.

எதிர்கட்சியாகும் தகுதியையும் இழந்த காங்கிரஸ்:

பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற இரு பொது தேர்தல்களிலும் காங்கிரஸ் எதிர்கட்சியாகும் தகுதியை கூட பெற முடியவில்லை.  நாடாளுமன்றத்தில் மக்களவை 543 உறுப்பினர்களை கொண்டுள்ளது.  எதிர்கட்சியாக பொறுப்பேற்க குறைந்தபட்சம் 55 இடங்களையாவது பெற வேண்டும்.  ஆனால் காங்கிரஸ் 2014 பொது தேர்தலில் 44 இடங்க்ளையும் 2019 பொது தேர்தலில் 52 இடங்களையும் பெற்று எதிர்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்தது.

காங்கிரஸ் வலுவிழக்க காரணங்கள்:

காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கை இழக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. பல்வேறு ஊழல் குற்றசாட்டுகள், வலுவற்ற தலைமை, நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் நலனில் அக்கறையின்மை, குடும்ப அரசியல் இவ்வாறு பல்வேறு காரணங்கள் உள்ளன.

காங்கிரஸ் மீது குற்றசாட்டுகள் வைக்கப்படும் போது மட்டுமே அவர்கள் தப்பிப்பதற்காக பாஜக அரசை எதிர்க்கிறது என்ற விமர்சனம் மக்களிடையே எழுந்துள்ளது.

அமையுமா வலுவான கூட்டணி:

காங்கிரஸ் தலைமையில் 2019ல் முதல் முறையாக அனைத்திந்திய எதிர்கட்சிகள் மாநாடு பாஜகவை எதிர்க்கும் விதமாக நடைபெற்றது.  இரண்டாவது மாநாடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தாவின் தலைமையில் நடைபெற்றது.  இந்த வருடம் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைவோம் என்று கூறி எதிர்க்கட்சிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நிதிஷ் குமார் தலைமை வலுவாக அமையுமா?

ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.  பிரதமராகும் கனவிலேயே கூட்டணியிலிருந்து விலகியதாக பாஜக தரப்பில் கூறப்பட்டது.  அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த நிதிஷ் குமார் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைப்பதே அவருடைய கனவு என தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அவருடைய ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சிகள் விரும்பினால் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என தெரிவித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்:

தொடர்ந்து 14 மணிநேர சிபிஐ ரெய்டுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் பாஜகவின் ஒரே இலக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே எனவும் அவரை எதிர்க்கும் விதமாகவே இத்தகைய ரெய்டுகள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.  மேலும் 2024 பொது தேர்தல் மோடிக்கும் கெஜ்ரிவாலுக்குமானது என அறிவித்துள்ளார் சிசோடியா.

நான்முனை போட்டியா?

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.  பாஜகவை எதிர்க்கும் வகையில் வலிமையான கூட்டணி அமையுமா? இல்லையேல் பிரதமர் வேட்பாளராகும் ஆசையில் தனித்து போட்டியிடுவார்களா? அவ்வாறு தனித்து போட்டியிட்டால் அது பாஜக வலுவாக அமையுமா?  இல்லையேல் ஒற்றுமையாக செயல்பட்டு வலுவான வேட்பாளரை தேர்ந்தெடுத்து 2024 பொது தேர்தலில் வெற்றி பெறுமா எதிர்கட்சிகள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: டெல்லியில் மலருமா தாமரை....ரெய்டு அரசியலை கையிலெடுத்த பாஜக.....பின்வாங்குமா ஆம் ஆத்மி....